திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயதாகும் சிறுமி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமிக்கு சமூக வலைத்தளம் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளம் மூலமாக சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், தீய எண்ணம் கொண்ட அந்த வாலிபர்கள் பள்ளி மாணவியை தங்கள் காம வலையில் விழ வைத்து, பாலியல் பலாத்காரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த, 14ம் தேதி மாலை சிறுமி வீட்டிலிருந்து திடீரென மாயமாகியுள்ளார். உறவினர்கள், ஊர்க்காரர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பின் மறுநாள் காலை, பட்டணம் கிராமம் அருகே சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியிடம் விசாரித்த போது, நான்கு வாலிபர்களும் சேர்ந்து அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், ஊரல் கிராமத்தை சேர்ந்த தனசேகர் (19), அவரது அண்ணன் திருநாவுக்கரசு (20), முரளி (23), பிரகலாதன் (24) ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
பின்பு நால்வரையும் கைது செய்த போலிசார், அவர்கள்மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.