உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாஹ் மாவட்டம், ஜசரத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்மணி அதே மாவட்டத்தில் உள்ள நாயக் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட அல்லாபூர் கிராமத்தில் வசித்து வரும் அல்கா என்பதை உறுதி செய்தனர். இவருக்கு 17 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி பள்ளியில் பயின்று வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து, அவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார். கொலையை அரங்கேற்ற 38 வயதுடைய சுபாஷ் சிங் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து, மகளை கொன்றுவிடுமாறு கூறி இருக்கிறார். இதனிடையே, தன்னை கொலை செய்ய வந்த சுபாஷிடம், நீங்கள் என் அம்மாவை கொலை செய்தால், நான் உங்களை திருமணம் செய்கிறேன் என சிறுமி தெரிவித்துள்ளார்.
அதாவது, சிறுமியை கொலை செய்ய தாயால் ஏற்பாடு செய்யப்பட்ட சுபாஷுடன், சிறுமி பேசிபழகி காதல் வயப்பட்டுள்ளார். இந்த உண்மை தெரியாமல் சிறுமியின் தாய் சுபாஷையே மகளை கொலை செய்ய நிர்ணயித்து, இறுதியில் காதல் ஜோடி ஒன்றிணைந்து அவரை கொலை செய்துள்ளது. இந்த உண்மையை அறிந்த அதிகாரிகள், சுபாஷ் மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.