தவெக மாநாட்டு பந்தக்கால் நடும் விழாவில் பங்கேற்காத விஜய் சினிமா படபூஜையில் மட்டும் ஆர்வத்துடன் பங்கேற்றது ஏன் என்ற விமர்சனம் வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநாட்டுப் பந்தல் கால் நடும் நிகழ்வில் விஜய் பங்கேற்காமல் படப் பூஜையில் மட்டும் கலந்து கொண்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் அளித்துள்ளார். அவர் பேசுகையில், “காலை 4 மாணிக்கு மாநாட்டுக்கான பந்தக்கால் விழா நடைபெற்றது. அதைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் சுமார் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் நான் நேரில் சென்றிருந்தேன். நான் அங்கே போகும்போது சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருந்தார்கள்.
பலரும் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சொல்லப்போனால் இது முன்னோட்டம்தான். அதற்கே இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. மாநாடு இதைவிட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை இது எடுத்துக் காட்டி இருக்கிறது. கால்கோள் விழாவுக்கு விஜய் வரமாட்டார் என்பது முன்பே தெரிந்த விசயம்தான். ஊடகங்கள் சில விஜய் வருவார் எனச் செய்தி வெளியிட்டன. எங்களுக்கு முன்பே விஜய் கலந்துகொள்ளப் போவதில்லை என்று செய்தி தரப்பட்டது.
ஜூம் வழியாக விஜய் கலந்துகொள்வார் என்றார்கள். அதற்காக முன்னேற்பாடு நாங்கள் எதையும் செய்யாத போது அப்படி செய்தி போட்டனர். விஜய் நேரடியாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அதில்தான் கட்சியின் கொள்கையை அவர் பேசப் போகிறார். தவெக ஏன் தொடங்கப்பட்டது? அதற்கான தேவை என்ன? எனப் பல விசயங்களை அவர் விளக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக அவர் பந்தக்கால் நடுவதற்கு வரவேண்டிய தேவை இல்லை. ரசிகர்கள் ஒருவேளை விரும்பி இருக்கலாம். அதற்கு தேவையற்றது என்பதுதான் தலைமையின் முடிவு.
இந்தப் பந்தக்கால் விழாவில் கலந்து கொண்டவர்கள் பலரும் ரசிகர்கள் இல்லை. அதைத்தாண்டிக் கடந்த 8 மாதங்களாக அரசியல்ரீதியாக புரிதல் கொண்டவர்கள். நாங்கள் முன்பே அதற்கு கள ரீதியாக நிர்வாகிகளைத் தயார் செய்து வைத்துள்ளோம். 2026க்குப் பிறகு நாங்கள் பல இடங்களில் கூட்டங்கள் போட இருக்கிறோம். மக்கள் பிரச்சினைக்காகப் போராட்டங்கள் நடத்த இருக்கிறோம். அதற்காகப் பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் பட்டியல் போட்டு வைத்துள்ளோம்.
அதை மனதில் வைத்துத்தான் நாங்கள் பெயருக்கு வந்த கட்சியில்லை என்று விஜய் சொல்லி இருக்கிறார். கட்சி உறுப்பினராக அறிவிப்பு வெளியான உடனேயே ஆப் மூலம் 45 லட்சம் பேர் இணைந்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவேன் என அறிக்கையை விட்டுவிட்டு கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் முன்பு நின்றுகொண்டுதான் கட்சி அறிவிப்பே வெளியானது.
ஆனால், தமிழிசை என்ன சொல்கிறார்? கடைசி படம் என்றார். இப்போது அடுத்த படம் நடிக்கிறார் என்று விமர்சனம் வைக்கிறார். விஜய் முன்பே தெளிவாக இரண்டு படங்கள் முடித்த பின் அரசியல்தான் என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே தவறான விமர்சனங்களை வைப்பவர்களைப் பார்த்துத்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோம்? என்று விஜய் கடிதத்தில் சொல்லி இருக்கிறார்.
நிச்சயம் அதிமுக, திமுகவின் பலம் என்ன என்பதை விஜய் அறிவார். முழு நேரமாக அரசியல் களத்தில் நின்றால்தான் வெற்றி பெற முடியும் என்பதை அறிவார். 2026 முதல் முழு நேரமாக விஜய் நேரடி அரசியலில் இருப்பார். மாநாடு முடிந்ததும் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். அதன்பின் விஜய் பேரணி போக இருக்கிறார். மண்டல மாநாடுகள் நடத்த இருக்கிறோம்.
முதலில் மாநாடு முடிக்க வேண்டும் என்பதுதான் விஜய் திட்டம். தேதி தள்ளிப்போனதால் படப்பூஜையும் மாநாட்டுப் பூஜையும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டது. இந்த69 ஆவது படத்தை எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் முடித்துவிட்டு அவர் கட்சிப் பணிக்கு வருவார். அதான் அவர் விருப்பம்.
அதற்கு முன்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கொள்கையே சொல்லாமல் கட்சி தொடங்கிவிட்டார் என்கிறார். அதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியும். நிச்சயம் வலதுசாரி அரசியலை விஜய் செய்ய மாட்டார். சமூகநீதி அரசியல்தான் எங்கள் இலக்கு. அதில் மேலும் எதைச் சேர்க்கப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்.