கேரளா மாநிலம் திருச்சூரில் நேற்று முன்தினம் அதிகாலை, 3 இடங்களில் உள்ள ஏடிஎம்களை உடைத்து ₹67 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் தப்பினர். கன்டெய்னர் லாரியில் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்ப முயன்ற அக்கும்பலை வெப்படை அருகே எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் சன்னியாசிபட்டி பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுச் சென்றபோது, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்ஐ ரஞ்சித்குமாரை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இதனால், தற்காப்பிற்காக கொள்ளையர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின் (37) பலியானான். மற்றொரு கொள்ளையன் ஹஸ்ரு (எ) அஜர்அலி (28) படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். கன்டெய்னர் லாரியில் பதுங்கி இருந்த கொள்ளையர்களான அரியானாவை சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன்கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், அரியானா மாநிலம் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் என்றும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என தென்மாநிலங்கள் முழுவதும் 15 இடங்களில் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கேரளா, ஆந்திரா மாநில போலீசார் வெப்படை வந்து, கைதான கொள்ளையர்களிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வெப்படை போலீசார், கைதான 6 பேர் மீதும் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் இருக்கும் அஜர்அலி தவிர மற்ற 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதுபற்றி போலீசார் கூறியதாவது:
அரியானாவில் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிக்கும் பல குழுக்கள் இருக்கிறது. அவர்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து கொள்ளையடித்து, அதிக பணம் சம்பாதித்து வந்துள்ளனர். அதனை பார்த்து, இக்கும்பலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், ஏடிஎம்களில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக 7 பேரும் சேர்ந்து பணம்போட்டு ஒரு கார் வாங்கியுள்ளனர். பிறகு கடந்த 2 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் தொடர்ந்து ஏடிஎம்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் வசதி வாய்ப்பை பெருக்கிக்கொண்டுள்ளனர்.
தென் மாநிலங்களில் கூகுள் மேப் உதவியுடன் அதிகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஏடிஎம் சென்டர்களை தேர்வு செய்து கொள்ளையடித்துள்ளனர். ஆந்திரா மாநிலம் கடப்பாவுக்கு 3 மாதத்திற்கு முன் காரில் சென்று, ஏடிஎம்மில் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பிட்ட தூரத்தில் காரை நிறுத்தி, அங்கு கூட்டாளி ஒருவரை நிறுத்தி கண்காணித்து கொண்டு, ஏடிஎம்மில் கைவரிசை காட்டியிருக்கின்றனர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மீது, ஸ்பிரே பெயின்ட் அடித்து அதை முடக்கியுள்ளனர். பின்னர், கேஸ் கட்டர் கருவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு 10 நிமிடத்தில் தப்பிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வெவ்வேறு ஊர்களுக்கு கொள்ளை அடிக்க செல்லும் போது, அந்த மாவட்டத்துக்கு தகுந்தபடி கார் பதிவெண்ணை மாற்றி கொள்வார்கள்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் கோலழி, சொரணூர், இருஞ்சாலக்குடி ஆகிய 3 இடங்களில ஏடிஎம் சென்டரில் கொள்ளையடித்ததும், ₹67 லட்சம் பணத்தை பாதுகாப்பாக, சொந்த ஊருக்கு கொண்டு செல்லவே கன்டெய்னர் லாரியை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர். ஆனால் செல்லும் வழியில் தமிழக போலீசாரிடம் சிக்கி கொண்டோம், என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கைதான இர்பான், சவுக்கீன்கான், முகமது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய 5 பேரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மாலதி, 5 பேரையும் வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொள்ளையர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
இதனிடையே போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜுமாந்தின் (37) உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சகோதரர் முஸ்தாக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் இலவச அமரர்ஊர்தி மூலம் கொள்ளையனின் உடல் ஓசூர் வரை கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்சில் 2 போலீசாரும் உடன் சென்றனர். ஓசூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு கொண்டு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அரியானாவிற்கு உடலை கொண்டு செல்கின்றனர்.