தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ”உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை ஒரு கூட்டணி கட்சி தலைவராக எப்படி பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு திருமாவளவன், ”கூட்டணி கட்சி தலைவராக வரவேற்கிறேன். உதயநிதி ஸ்டாலினை வாழ்த்துகிறேன். கருணாநிதிக்கு, ஸ்டாலின் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் இன்றைய முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார். அவருக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்” என்றார்.
இதையடுத்து, ”உங்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் உங்களுக்கு வழங்காமல் உதயநிதிக்கு வழங்கப்பட்டு இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? வருத்தம் எதுவும் உள்ளதா?” என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக அவர் சிரித்தபடி பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு சென்றார்.
சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையே மனஸ்தாபம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசியது தான் இதற்கு காரணம். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு சர்ச்சையானது. இதனால் தான் இன்று திருமாவளவனிடம் உங்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காதது வருத்தம் இல்லையா? என பத்திரிகையாளர் கேள்வி கேட்டனர். ஆனால் திருமாவளவன் அதற்கு பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது.