சேலம் மாவட்ட காவல் துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பலர் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் நிலையில், சேலம் லைன் மேடு பகுதியில் மாநகர காவல் துறையினருக்கான அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் அங்கு மாநகர் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண் காவலர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு ஒரு புகார் மனுவை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தங்கள் வசிக்கும் குடியிருப்பில் காவலர் ஒருவர் தனது சக காவலர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் வலம் வருவதாகவும், அவரது நண்பர்களும் அப்படியே செய்வதாக புகார் கூறியிருக்கின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களில் வீட்டு கதவை தட்டி ஆபாச வார்த்தைகளால் பேசுவதோடு பாலியல் தொல்லை தருவதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளனர்.
இதேபோல் சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 2 பெண் போலீசாருக்கு உடன் பணியாற்றும் சக போலீசாரே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஆயுதப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 5 போலீசாரை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் மேல் அதிகாரி ஒருவர் அந்த அறிக்கையை கிழித்து போட்டுவிட்டு, எச்சரிக்கை மெமோ மட்டும் கொடுக்கும் படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புகார் அளித்த பெண் போலீசாரையும் அழைத்து எச்சரித்துள்ளனர். இதனால் புகார் அளித்த பெண் போலீசாருக்கு மேலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். இதனால் பொறுமை இழந்த பெண் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபிக்கு 6 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தை சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் கடிதத்தில் இருக்கும் பெண் காவலரை அழைத்து காவல் ஆணையர் ரகசியமாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் புகாருக்குள்ளான நபர் உயர் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பதால் இந்த புகார் தொடர்பாக எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக தனி குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை போலீஸாரிடம் தான் பெண்கள் அளிப்பார்கள். ஆனால் பெண் போலீசாருக்கே சக ஆண் போலீசார் பாலியல் தொல்லை அளிப்பதாக எழுந்துள்ள புகார் சேலம் மாவட்ட காவல் துறையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றனர் பெண் காவலர்கள்.