செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி அதாவது 8 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பத்து நாட்களே இடையில் இருக்கிறது. மாநாட்டுக்கு காவல் துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் மாநாட்டு பணிகள் தாமதமானதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் நடக்காது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சொன்னது போல் பல சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை அனுமதி அளித்தும் மாநாட்டை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் தமிழக வெற்றி கழக முதல் அரசியல் மாநாடு தொடர்பாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே அதில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறும் என விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதியை அழித்துவிட்டு புதிய தேதி எழுதப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் அக்டோபர் 15ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. மாநாடு தொடர்பாக இதுவரை விஜய் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில் கட்சியினர் விளம்பரங்களை தீவிரமாக எழுதி வருகின்றனர். இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் தான் மாநாடு நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.