விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அப்படி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் நடந்து வருகிறது.
இந்த சீசனில் விஜேவாக இருந்த மணிமேகலை பங்கேற்று வந்தார். இந்நிலையில் தான் நேற்று அவர் திடீரென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் அவர் தனது விலகலுக்கு விஜே பிரியங்கா தான் காரணம் என்பது போல் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ”இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடரப்போவது இல்லை. நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அர்ப்பணிப்பு, நேர்மை, கடும் உழைப்பு என 100 சதவீத முயற்சிகளை கொடுப்பேன்.
அது போல்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான் 2019 நவம்பர் முதல் பயணத்தை தொடங்கினேன். அன்று முதல் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறேன்.
ஆனால் சுயமரியாதையை விட வேறு எதுவுமே முக்கியமில்லை. என் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இவையெல்லாமே இரண்டாம் பட்சம்தான். சுயமரியாதைதான் பிரதானம். எனவே நான் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன்.
இந்த நிகழ்ச்சியானது மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்க வந்த ஒருவர் தான் ஒரு குக் என்பதை மறந்துவிட்டு ஆங்கரிங் பணிகளில் தலையிட்டு என் செயல்பாடுகளை தடுக்கிறார். இதுபற்றி கவலை தெரிவித்தாலும் கூட அதனை குற்றமாக கருதுகிறார்கள்.
ஆனாலும் எனக்கு எது சரி என படுகிறதோ அதற்கு நான் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். யாரையும் பற்றியும் கவலைப்பட மாட்டேன். தற்போது இந்த நிகழ்ச்சி உண்மை தன்மையை இழந்துள்ளது. முன்பு நான் ரசித்த, வியந்த, மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி ஷோ இதுவல்ல. எனவே இனி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்.
நான் 15 ஆண்டுகளாக விஜேவாக இருக்கிறேன். எத்தனை ஏற்றத்தாழ்வுகளை பார்த்தாலும் கூட இதுபோன்ற முதிர்ச்சி தன்மை இல்லாத நடத்தையை பார்த்தது இல்லை. வாழு வாழ விடு. சீசன் 1 முதல் தற்போது வரை நிறைய பேருடன் பணியாற்றிய நினைவுகளை அசை போடுவேன். என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி என தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.” என தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவின் மூலம் மணிமேகலை தனது விலகலுக்கு விஜே பிரியங்கா தான் காரணம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் தற்போது தொகுப்பாளினியான பிரியங்கா தான் குக் விக் கோமாளியில் பங்கேற்றுள்ளார். இதனால் மணிமேகலை விலகலுக்கு பிரியங்கா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது.
இது விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் டிடி, ஜாக்குலின், பாவனா உள்ளிட்டவர்களும் விஜய் டிவியில் இருந்த காணாமல் போனதற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என்று பலர் வலைதளங்களில் பதிவிட தொடங்கினர்.
இது சர்ச்சையாகி உள்ள நிலையில் தான் தற்போது இணையதளங்களில் இன்னொரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது எக்ஸ் பக்கத்தில் பிபி மாமா என்ற பயனர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், எனது தொகுப்பாளினி கனவு மொத்தமாக நொறுங்கி போய்விட்டது என்று பிரியங்கா மீது விஜே பாவனா குற்றம்சாட்டி உள்ளார். இதனால் பிரியங்காவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மணிமேகலை மட்டுமில்லை” என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் அவர் விஜே பாவனா கூறியதாக ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டு இருந்த செய்தியின் ஸ்கிரின்ஷாட்டையும் பகிர்ந்து இருந்தார்.
இந்த பதிவும் வைரலாக தொடங்கியது. பலரும் பிரியங்காவை விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் தான் பிபி மாமா பதிவுக்கு விஜே பாவனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அந்த பதிவை டேக் செய்து, ”இது முழுமையான குப்பை செய்தி. அதில் கூறப்பட்டு இருப்பது போல் நான் எதுவும் கூறியது இல்லை. தயவுசெய்து முதலில் நான் பேசியதாக கூறப்படும் வீடியோவை பதிவிடுங்கள். அதன்பிறகு இதுபற்றி பேசுவோம்.
வேறு துறையில் இருக்கும் எனது கனவை நிறைவேற்றுவதற்காக தான் சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறினேன். அதாவது
எனக்கான எல்லைகளை அதிகரிக்கவும், என் கணவர் வசிக்கும் மும்பையில் சேர்ந்து வாழவும் இந்த பணியை மாற்றி கொண்டேன். அவ்வளவு தான்” என கூறியுள்ளார். விஜே பாவனா விஜய் டிவியில் மாகாபா ஆனந்த் உடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
விஜே பாவானா கூறிய இந்த பதிவும் தற்போது வைரலாக தொடங்கி உள்ளது. இந்த பதிவை விஜே பிரியங்காவின் ரசிகர்கள் இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.