வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். தந்தையை இழந்த இவரை சிறுவயது முதலே அவரது பெரியப்பா வளர்த்து படிக்க வைத்துள்ளார். இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர். ஆனால் இளம்பெண் ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. திருமணம் செய்யாமல், குடும்பத்தினருடனே ஒன்றாக இருந்துவிடுகிறேன்’ என கூறி வந்துள்ளார்.
ஆனால் அவரது குடும்பத்தினர், திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் திருமணத்துக்கான தேதியை குறிக்க இருகுடும்பத்தினரும் ஜோசியரிடம் சென்றுள்ளனர். இதற்கிடையில் இளம்பெண்ணும், அவரது அண்ணன் முறையான பெரியப்பா மகனும் வெளியே சென்று இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் போன் செய்தபோது, இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து குடும்பத்தினர் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இருவரின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். அப்போது திடீரென செல்போனை ஆன் செய்துள்ளனர். இதில் அண்ணனும், தங்கையும் திருவண்ணாமலையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று நேற்று அதிகாலை 2 பேரையும் மீட்ட போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது இளம்பெண் அண்ணன் முறையான பெரியப்பா மகனை திருமணம் செய்து கொள்கிறேன். இதற்காகதான் அவருடன் சென்றேன் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அறிவுரைகள் வழங்கியும் ‘நாங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள்’ என இளம்பெண் சொன்னதையே திரும்ப திரும்ப கூறியபடி அடம் பிடித்தார்.
திருமணம் செய்து வைக்கும்படி கூறிய அவரது அண்ணனுக்கு ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது வரை குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் இளம்பெண் கூறியதை கேட்டு அவரது அண்ணி, ‘என் வாழ்க்கை பறிபோய்விட்டதே’ என கதறி அழுதார். தொடர்ந்து அண்ணனுடனான காதல் தவறானது என இளம்பெண்ணுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீசார், அவரது சம்பந்தம் இல்லாமல் யாருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கக்கூடாது என குடுபத்தினருக்கும் தெரிவித்தனர். மேலும் பெண்ணின் விருப்பத்தின்படி அவரது குடும்பத்தினருடன் அவரை அனுப்பி வைத்தனர்.