பீகார் மாநிலம் சமஸ்திபுர் மாவட்டத்தில் கங்காபூர் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் தனது பணிகளை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாகத்திலும் செயல்பட்டு வரும் சஞ்சய் குமார் என்ற மருத்துவர் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து குடிபோதையில், அந்த செவிலியரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால், அந்த செவிலியர் பிளேடை எடுத்து மருத்துவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டு அவர்களிடம் இருந்து தப்பி மருத்துவமனையின் அருகில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் சென்று மறைந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், செவிலியரை பத்திரமாக மீட்டதுடன், பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவர் சஞ்சய் குமார், அவதேஷ் குமார் மற்றும் சுனில் குமார் குப்தா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய டி.எஸ்.பி குமார், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் செவிலியரை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் முன்பாக மருத்துவமனையை உள்பக்கமாக பூட்டி வைத்திருந்தனர். செவிலியர் தைரியமாக செயல்பட்டு தப்பியது பாராட்டத்தக்கது என்று கூறினார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து செவிலியர் பயன்படுத்திய பிளேடு, மதுபாட்டில்கள் மற்றும் செல்போன்களை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் செவிலியர் ஒருவரை அங்கு பணியாற்றும் மருத்துவர்களே பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.