விஜய்யின் முதல் மாநாடு நடக்குமா..? நடக்காதா?

வருகின்ற 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 33 நிபந்தனைகளுடன் மாநாட்டிற்கு காவல் துறை தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாடு வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிப் போக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை கட்சியின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டதாகவும், இந்த ஆலோசனையில் அவர் கடும் அதிருப்திக்கு ஆளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

குறிப்பாக காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை வருகின்ற 23ஆம் தேதிக்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால், இந்த மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தீபாவளி மற்றும் அக்டோபர் மாதம் மழைக் காலம் என்பதால் கட்சியின் மாநாடு நடத்துவதற்கு சிக்கல் ஏற்படலாம் என்று நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகி வந்த நிலையில், திமுக, பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் கட்சியின் மாநாடு தள்ளிப் போவதை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக,

சொன்னதை செய்வதெல்லாம் திரைப்படங்களில் மட்டும் தானா நடிகர் விஜய்?

முதல் கோணல் முற்றும் கோணல்

நடிகர் விஜய் மாநாடு நடத்துவாரா? மாநாட்டுக்கு முன்பு கட்சியை கலைத்து விட்டு ஓடி விடுவாரா? என்றெல்லாம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Response