பெங்களூரில் ஓலா ஆட்டோ ஓட்டி வருபவர் முத்துராஜ். கடந்த வாரம் மாகடி ரோட்டில் 2 மாணவிகள் ஓலா ஆட்டோவை முன்பதிவு செய்தனர். இருவரும் ஒரே நேரத்தில் 2 ஓலா ஆட்டோவை ‘புக்’ செய்தனர்.
முதலில் வந்த ஆட்டோவில் அவர்கள் ஏறிய நிலையில் இன்னொரு ஆட்டோவை கேன்சல் செய்தனர். இதனால் கடுப்பான அந்த ஆட்டோ டிரைவர் அவர்களை விரட்டி கன்னத்தில் அறைந்தார். மேலும் மிரட்டினார்.
இதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதன்பிறகு அந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு நிதி என்பவர் பெங்களூர் மாநகர போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி ஓலாஆட்டோ டிரைவர் முத்துராஜை கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் நீதிமன்ற காவலில் உள்ள முத்துராஜ் ஜாமீனில் வெளிவர வேண்டுமானால் ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகும் என கூறப்படுகிறது.
அதாவது வழக்கறிஞர் செலவு, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது. அதாவது ஓலா டிரிப்பை மாணவிகள் கேன்சல் செய்ததால் முத்துராஜ்க்கு அதிகபட்சமாக ரூ.20 முதல் ரூ.30 மதிப்பிலான எரிபொருள் மட்டுமே இழப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அவரது கோபம் என்பது ரூ.30 ஆயிரம் வரையிலான செலவை இழுத்துவிட்டது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் கைதான முத்துராஜை ஜாமீனில் எடுக்க ஆகும் ரூ.30 ஆயிரம் தொகையை சிலர் நன்கொடை மூலம் செலுத்த தயாராக உள்ளனர். அதாவது முத்துராஜ்க்கு நிதி உதவி செய்ய பலரும் முன்வந்துள்ளனர். ‘Crowd Funding’ மூலம் அவருக்கு உதவி செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மோகன் தாசரி என்பவர், ”அவர் தவறாக நடந்து கொண்டதற்கு 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஜாமீனில் வெளிவருவதற்கு ரூ.30,000 ஆகும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இதனால் முத்துராஜின் ஜாமீனுக்கு உதவ விரும்பும் வழக்கறிஞர்களுக்கு நான் ஆயிரம் வழங்க உள்ளேன்’. மற்றவர்களும் வழங்க வேண்டும்”என்றார்.
இதுதொடர்பாக இன்னொரு பயனாளர், ”கன்னட ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் திரட்ட முடியுமா? என்று தெரியப்படுத்துங்கள். நானும் ரூ.1000 பங்களிக்க விரும்புகிறேன்” என்றார். இன்னொரு நபர், ”நான் உங்களது பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நானும் ரூ.1000 வழங்க உள்ளேன். ஆட்டோ டிரைவருக்கு நியாயம் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். தினசரி பணம் சம்பாதித்து அன்றாடம் வாழுவோருக்கு பணத்தின் மதிப்பு என்பது தெரியும். இதனால் உதவி செய்ய விரும்புகிறேன்” என்றார்.
இதற்கிடையே இன்னொரு தரப்பினர் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பெண்களை தாக்கி, மிரட்டிய ஆட்டோ டிரைவருக்கு நிதி உதவி செய்ய எப்படி மனம் வருகிறதோ? என விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சித் என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் ஒருவர்,”கன்னட போராளிகள் ஒரு இளம் மாணவரை தாக்கிய குற்றவாளிக்குக் கூட்டமாக நிதியளிக்கிறார்களா? பிராந்திய பெருமையை பயன்படுத்தி இதுபோன்ற குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது கவலைக்குரியது” என கூறியுள்ளார்.அதேபோல் இன்னும் பலரும் இந்த Crowd Funding முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.