மயக்க மருந்து கொடுத்து கல்லூரி பெண் பாலியல் பலாத்காரம் : போலீசார் தேடல்

இன்றைக்கு மதுப்பழக்கம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.. மதுப்பழக்கம் தாண்டி, நண்பர்களுடன் சேர்ந்து பார்டிக்கு செல்வதும் அதிகரித்துவிட்டது. நீண்ட தூரம் வெளியில் சென்று அறை எடுத்து தங்கி பார்டி செய்யும் கலாச்சாரம் சென்னை பகுதிகளில் அதிகம். குறிப்பாக சொல்வது என்றால், சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள் பார்ட்டிகளுக்கு புகழ் பெற்றவை.

ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், பெரிய தொழில் அதிபர்கள், பெரிய நிறுவனங்களில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் என்ஜாய் செய்ய பப் மற்றும் பார்ட்டிக்கு செல்கிறார்கள். இதேபோல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுமே சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள்.

அப்படித்தான் நண்பர்களுடன் விருந்துக்கு சென்றபோது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 19 வயதான மாணவி ஒருவர், இது தொடர்பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது ஆண் நண்பர்களுடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது நண்பர்களுடன் குளிர்பானம் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தேன். அந்த பரிசோதனையில் நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என கருதுகிறேன். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார், மாணவிக்கு அவரது நண்பர்களே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்களா? அல்லது வேறு யாரும் அப்படி செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response