சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
பெண் மருத்துவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு பேட்ஜ் எம்பிபிஎஸ் படித்துள்ளார். அப்போது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். படிக்கும்போது இருவரும் நண்பர்களாகவும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் பெண் மருத்துவருக்கும், வடபழனி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெண் மருத்துவரின் கணவரின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச வார்த்தைகள் மற்றும் ஒரு ஆண் நபரின் நிர்வாண படம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவரின் கணவர் அந்த ஐடியை பிளாக் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் வாட்ஸஅப் எண்ணிற்கு பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதுடன், அவதூறான வார்த்தைகளை பேசி ஆடியோவும் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் பெண் மருத்துவர் பற்றி தவறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதே போல் பெண் மருத்துவரின் எண்ணுக்கும் அந்த நபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பெண் மருத்துவரின் கணவர் பல்லாவரம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில் பெண் மருத்துவருடன் ஒன்றாக படித்த நபர்தான் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் பேரில் திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் கடலூரை சேர்ந்த பயிற்சி மருத்துவர் சுரேஷ்குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,பெண் மருத்துவரை மிரட்டியதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனையடுத்து பல்லாவரம் காவல் நிலைய போலீசார் சுரேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக வலைதலங்களில் பெண்களுக்கு பாலியல் அத்துமீறல் தினம் தினம் மர்ம நபர்களால் நடைபெற்றுகொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பயிற்சி மருத்துவர் ஒருவரே பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.