தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் வெறும் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் தான் கலந்து கொள்கிறார்களா..?

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனால் சினிமாவில் இருந்தும் விலகவிருப்பதாக அறிவித்துவிட்ட விஜய், கடந்த வாரம் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இது செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு பாதுகாப்பு கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில், மாநாடு குறித்த முழு தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில், இடதுபுறமாக 28 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.

அதே பாதையின் வலது புறம், 40 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில், வட மாவட்டங்களில் இருந்து செல்லும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்த 5 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மாநாடு நடைபெறும் திடலுக்குச் செல்ல 3 வழிகளும், வெளியே வருவதற்கு 3 வழிகளும் அமைக்கப்படவுள்ளதாம். மேலும், மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதுதவிர அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வேன்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும், தீயணைப்புத் துறையிடம் அனுமதியும், பாதுகாப்பும் கோரியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக முதல் மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், தவெக சார்பில் பாதுகாப்பு கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response