விஜய்யின் அரசியல் வருகை திமுகவுக்கு பாதிப்பை தருமா?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது திமுகவை எந்த வகையிலாவது பாதிக்குமா?, உதயநிதியை துணை முதல்வராக்குவதால் மக்கள் எதிர்ப்பை திமுக சம்பாதிக்கக் கூடுமா? , பாஜக மத்திய அரசுடன் திமுக இணக்கம் காட்டத் தொடங்கி உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்து பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இப்படி மூன்று கோணங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு அந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வேவில் விஜய் கட்சிக்கு 10% வாக்குகள் கிடைக்கலாம் எனச் சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது 5% வாக்குகளைப் பெற்றார். சீமான் பல தேர்தல்களாக தனித்தே போட்டியிட்டு 8% வாக்குகளை தொட்டுள்ளார். தேமுதிகவை புதியதாக தொடங்கி விஜயகாந்த் 2006இல் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். அக்கட்சி அப்போது 8.4% வாக்குகளைப் பெற்றது.

2009 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 10% வாக்குகளைப் பெற்றார். கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் தேமுதிகவை ஒரு மாற்றாக நம்பினர். அதே அவர் அதிமுகவுடன் 2011 இல் கூட்டணி வைத்தபோது வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். ஆனால், கட்சி 7.9% என்ற அளவில் வாக்கு சதவீதத்தில் குறைந்தது. அதற்கு முக்கிய காரணம் 41 தொகுதியில்தான் தேமுதிக போட்டியிட்டது. அதில் 29 இடங்களை வென்றது. அதிகாரத்தைக் கைப்பற்றும் விதமாக விஜயகாந்த் வென்றார்.

ஆனால், அரசியல்ரீதியாக அதன் பின்னர் படுதோல்வியை தழுவிக் காணாமல் போனது. அந்த இடத்தை மீண்டும் கமலுக்கு அளித்தார்கள். அவரது டார்ச் லைட் பாதியிலேயே பேட்டரி தீர்ந்து எரியாமல் அணைந்துவிட்டது. அவர் இடம் சீமானுக்கு போய் உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் புதியதாக செல்வாக்கு மிக்க ஒருவர் கட்சித் தொடங்கும்போது கிடைக்கும் சதவீதத்தைவிட, விஜய் லைம் லைட்டில் இருப்பதால் கூடுதலாக வாக்குகளைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது. அதற்கு அரசியலில் ஒரு உத்தரவாதமும் இல்லை. எம்.ஜிஆரின் மனைவி என்ற அடையாளம் இருந்து ஜானகியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். சிவாஜிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அது ஓட்டாக மாறவே இல்லை. இவை எல்லாம் சில முன் உதாரணங்கள்.

அடுத்தபடியாக பாஜகவுடன் இணக்கமாகச் செல்வதால் திமுகவுக்குச் சரிவு ஏற்படுமா? என்ற சர்வே தேவையே இல்லாதது என்று சிலர் சொல்கிறார்கள். பாஜகவை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதால்தான் 2014 தோல்வியைச் சந்தித்தார்கள். 2019இல் தோல்வியைச் சந்தித்தார்கள். 2024 இல் கூட மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. பாஜகவுடன் இருந்த காரணத்தால் அதிமுகவும் படுதோல்வியைச் சந்திக்கவே நேர்ந்தது. சொல்லப் போனால் பாஜக எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது.

அதேபோல் திமுக எதிர்ப்பு என்பதும் வலுவாக உள்ளது. ஆனால், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் ஒரே அணிக்குப் போகாமல் தடைப்பட்டு நிற்கிறது. அதிமுக மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. திமுக எதிர்ப்பு அதேபோல பாஜகவுக்கும் சாதகமாக உள்ளது. அதனால்தான் அதிமுகவை முந்திக் கொண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சில இடங்களில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதிமுகவைவிட பாஜக அண்ணாமலை திமுகவை வேகமாக எதிர்க்கிறார். ஆகவே திமுக எதிர்ப்பு மூலம் அதிமுகவுக்குப் போகவேண்டிய ஓட்டுகள் பாஜக பக்கம் போகிறது.

மற்றொரு பக்கம் சீமானும் திமுகவைத்தான் எதிர்க்கிறார். ஆகவே திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகம் உள்ளன. அப்படி இருந்தும் திமுக ஆளும் கட்சியாக வருவதற்குக் காரணம், எதிர்ப்பு ஓட்டுகள் ஒரு அணிக்குப் போய்ச் சேரவில்லை. சிதறி சின்னாபின்னமாக இருக்கிறது. எனவே திமுக வெற்றி பெறுகிறது. அப்படி உள்ள நிலையில் பாஜக பக்கம் திமுக போனால் 2026இல் மிகப்பெரிய அடியைச் சந்திக்கக் கூடும் என்றே கள நிலவரம் சொல்கிறன. ஆட்சி நடத்த, மீண்டும் ஆட்சிக்கு வரப் பணம் தேவை. பண வேண்டும் என்றால் திட்டங்கள் தேவை. திட்டங்கள் வந்தால் ஒப்பந்தம் எடுக்கலாம். அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஒரு கணக்கை திமுக போடுவதாகவும் அதனால் ஒரு நெருக்கத்தை மத்திய அரசுடன் காட்ட முற்படுவதாகவும், அப்படி ஒரு இணக்கம் வந்தால் திமுக ஆட்சி அதிகாரத்தை அதற்காக விலை பேச நேரிடம் என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்ரனர் .

மூன்றவதாக துணை முதல்வர் பிரச்சினை. அந்தப் பதவியால் ஒரு பலனும் உதயநிதிக்குக் கிடைக்கப் போவதில்லை. அதைவிட அதிகாரம் மிக்க பதவியில்தான் இப்போது இருக்கிறார். துணை முதல்வர் என்ற பதவியை முதல்வரே ஜிஓ போட்டுச் செய்துவிட முடியும். அமைச்சர் பதவி என்பது ஆளுநர் செய்து வைப்பது. அப்படிப் பார்த்தால் உதயநிதியிடம் மறைமுகமாக மற்றும் நேரடியாக அதிக அதிகாரம் உள்ளது. மேலும் சீனியர் மற்றும் ஜூனியர் பிரச்சினை திமுகவில் தீயாகப் பரவி வரும் நிலையில், உதயநிதி து.முதல்வரானால், அது குடும்பக் கட்சி என மீண்டும் ஒரு முத்திரையை புதியதாகக் குத்திக் கொள்ளும்.

தமிழிசை செளந்தரராஜன் போன்றவர்கள் கட்சியில் மூத்தவர் துரை முருகனே பெரிய அளவில் கௌரவிக்கப்படாமல் உள்ளார் என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். ஒருவேளை உதயநிதி து. மு. ஆனால், அது அடிமட்ட தொண்டன் வரை பாதிப்பை உண்டாக்கும். மேலும் எடப்பாடி எங்களைப் போன்ற சாதாரண தொண்டன் கூட அதிமுகவில் முதல்வராக முடியும் என 2026இல் பேசுவார். அன்றைய அரசியல் சூழ்நிலையில் அது சில தாக்கங்களைத் தந்தாலும் திமுகவுக்கு அது ஆட்சி ரீதியாகப் பாதிப்பைக் கொடுக்கும் என்கிறார்கள் சில கட்சி சீனியர்கள்.

Leave a Response