முதலமைச்சர் பொறுப்பை யார் பார்த்து கொள்வார்?

தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு காரில் கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியெங்கிலும் திமுக தொண்டர்கள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில் இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது என்றாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பதோடு நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் கடந்து சென்றாலும் என் கவனம் எல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் எனவே ஆட்சிப்பணி, கட்சிப்பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்று அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response