இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பல காலமாகவே மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்.
இதற்கிடையே கடந்த வாரம் பிரதமர் மோடி வெளிநாடு சென்றிருந்த நிலையில், அப்போது பிரதமரின் விமானம் பாகிஸ்தான் மீது பறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் பிரதமரின் விமானம் பாகிஸ்தான் மீது பறந்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த வாரம் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்து நிலையில், அப்போது தான் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பிரதமர் மோடியின் விமானம் காலை 10:15 மணிக்குப் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்துள்ளது. சுமார் 46 நிமிடங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் இருந்த பிரதமரின் விமானம் 11:01 மணிக்கு பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பிரதமர் மோடியின் விமானம் சித்ரால் வழியாகப் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் கட்டுப்பாட்டு மையங்களின் கீழ் வரும் பகுதிகளில் பயணித்த பிரதமர் மோடியின் விமானம், அதன் பிறகு பஞ்சாபின் அமிர்தசரஸ் வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமரின் விமானம் ஒரு நாட்டின் மீது பறக்கச் சிறப்பு அனுமதி எல்லாம் தேவையில்லை.. அனைத்து விமானங்களைப் போலத் தான் அனுமதி உள்ளது. சில சமயங்களில், பிரதமரின் விமானத்திற்கு அழைப்புக் குறியீடு மட்டும் ஒதுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்தது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதைப் பாகிஸ்தான் கடை செய்ததது. தனது வான்வெளியை முற்றிலுமாக மூடியது. அதே ஆண்டில், பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்ற நிலையில், அப்போது பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. இருப்பினும், இந்த கோரிக்கையைப் பாகிஸ்தான் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது பாகிஸ்தான் வான்வெளியில் இந்தியப் பிரதமர் மோடி பறந்துள்ளார. இந்த நிகழ்வு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.