முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பதவி கொடுங்கள் என்று மேடையிலேயே கேட்டதால் பாஜகவில் சலசலப்பு

கடந்த மூன்று முறையாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி.

விஜயதாரணி, 2021ல் மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்துக் காத்திருந்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து, பாஜக தலைவர்கள் விஜயதாரணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி.

பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். விஜயதாரணி கட்சி தாவியதால் அவர் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவி பறிபோனது.

இதையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி சீட் விஜயதாரணிக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், விஜயதாரணிக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதேபோல, விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் விஜயதாரணிக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. பாஜகவில் கட்சியிலும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜக பொதுக்கூட்டத்தில் நேரடியாக எனக்கு பதவி கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார் விஜயதாரணி. தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் விஜயதாரணி பேசுகையில், “3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இருந்த பதவியை விட்டுவிட்டு பாஜகவுக்கு வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் வரவில்லை, எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக பதவி தேவை.

6 மாதம் ஆகிவிட்டது, இன்னும் பதவி கொடுக்கவில்லை. பிரச்சனை இல்லை. நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எனக்கு நல்லது பண்ணுவீங்க என்று எனக்கு நன்றாகத் தெரியும். என்னைப் போன்றவர்களின் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும்.

கேசவவிநாயகம் அண்ணனுக்கு என்னை நன்றாகத் தெரியும். என் தொகுதிக்காரர். என்னை பல ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக பார்த்தவர். நம் தலைவர் அண்ணாமலை தம்பி எப்போதும், “உங்களை போல தியாகம் செய்துவிட்டு கட்சிக்கு வந்தவர் வேறு யாரும் இல்லை, உங்களை கட்சி சரியாகப் பயன்படுத்தும்” என அடிக்கடி சொல்வார்.

நாம் கட்சிப் பணி ஆற்ற வந்திருக்கிறோம். தேசப்பணி ஆற்ற வந்திருக்கிறோம். இதில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராமல் இந்த தப்பு செய்தார்கள், அதை தட்டிக் கேட்டேன்.

பாஜகவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தார்கள். நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை நிதித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உதாரணம் பாஜகவில் இருக்கிறது. அதைப் பார்த்து தான் நான் பாஜகவில் இணைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் நேரடியாக தனக்கு பதவி கொடுக்க வேண்டும் என பொது மேடையிலேயே கோரிக்கை வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response