உலகை அச்சுறுத்த வரும் மங்கி பாக்ஸ் வைரஸ் : டாக்டர் என்ன சொல்கிறார் தெரியுமா..?

கொரோனா பெருந்தொற்று உலகையே இரண்டு ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்த நிலையில், இப்போதுதான் மெல்ல உலகம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்த வைரஸ் உலகை அச்சுறுத்தக் கூடியதாக மாறி இருக்கிறது.

மங்கி பாக்ஸ் எனக் குறிப்பிடப்படும் குரங்கு அம்மை குறித்து வெளியாகும் தகவல்கள் மக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளன. எப்படி கோவிட்19 வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடிய ஆபத்து இருந்ததோ அதேபோல இந்தக் குரங்கு அம்மை நோயும் காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் ஆபத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நோய்த் தொற்று கிளேட் 1 வகை மங்கி பாக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. இப்போது இந்த நோய்த் தொற்றால் காங்கோ குடியரசில் 70% நோயாளிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் அடுத்த ஊரடங்கு உத்தரவுக்கு உலகம் தயாராகிவிட்டதா? மீண்டும் ஆபத்து நம்மை நோக்கி வருகிறதா? எனப் பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இது குறித்து டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இதன் வீரியம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார். அவர் இந்த வைரஸ் பற்றி எழுதியுள்ள கட்டுரையில், “ஆகஸ்ட் 14,2024 அன்று உலக சுகாதார நிறுவனம் எம்-பாக்ஸ் அம்மையை ” சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் தரும் பொதுச் சுகாதார அவசரநிலை”யாக பிரகடனம் செய்தது. ( பேண்டமிக் என்ற வார்த்தை பிரயோகம் இப்போது நடைமுறையில் இல்லை அதற்குப் பதிலாக PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது). உலகத்தின் ஒரு பகுதியில் மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் கிருமித் தொற்று உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவி பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கலாம் எனும் நிலையில் இந்த அறைகூவல் விடப்படும்.

எம் பாக்ஸ் என்பது 2022 வரை மத்திய ஆப்ரிக்க தேசமான காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் அவ்வப்போது கொள்ளை நோயாக ஏற்பட்டு தானே தணிந்து போகும் பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. ஆப்ரிக்க நாட்டில் ஏற்படும் பிரச்சனை என்பதால் வளர்ந்த நாடுகளும் இந்த தொற்றைக் கண்டுகொள்ளவில்லை. இது குறித்த ஆராய்ச்சிக்காகவோ, மருந்துக்காகவோ 2022 வரை பெரிதாக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை. எங்கோ ஒரு ஆப்ரிக்க தேசத்தில் நடக்கிறது. நமக்கு அதனால் பிரச்சனை இல்லை என்ற நினைப்பில் தான் வளர்ந்த நாடுகள் இருந்தன. இன்னும் இருக்கின்றன என்றும் கூடச் சொல்லலாம்.

எனினும் 2022 ஆம் ஆண்டு வைரஸில் ஏற்பட்ட மரபணு மாற்றங்களின் விளைவால் காங்கோவையும் தாண்டி 110 நாடுகளுக்கு தொற்றுப் பரவல் நடந்து, சுமார் ஒரு லட்சம் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுள் 200+ மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் பிறகு அதிகமான ஆராய்ச்சிகள் இந்த வைரஸ் குறித்தும் இந்தத் தொற்று பரவும் விதம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகள் இதோ எம் பாக்ஸ் வைரஸ் வகையறாவில் இரண்டு பரம்பரைகள் உண்டு. முதல் பரம்பரை, கோபமான வீரியம் கொண்ட க்ளாடு ஒன். இரண்டாவது பரம்பரை, கொஞ்சம் பாந்தமான க்ளாடு டூ 2022 -2023 எம் பாக்ஸ் பெருந்தொற்றின் போது அதன் தொற்றாளர்களை மரணமடையச் செய்யும் விகிதம் 0.2% ஆக இருந்தது. அப்போது பரவியது க்ளாடு டூ வகையாகும்.

தற்போது 2024 ஆம் ஆண்டு காங்கோவில் பரவிக் கொண்டிருப்பது க்ளாடு ஒன் வகையாகும். அதிலும் ரெட் சிப் பொருத்தப்பட்ட க்ளாடு ஒன் பி வகை . இந்த வகை மனிதர்களுக்கு இடையே முன்னிலும் வேகமாகப் பரவுமாறு தன்னை மரபணு மாற்றங்கள் மூலம் தகவமைத்துக் கொண்டுள்ளதாம். இப்போது இதன் மரணவிகிதம் 3 முதல் 5 % என்ற அளவில் அதிகரித்துள்ளது. முன்னர் பரவிய க்ளாடு டூ பெரும்பான்மையாக ஆண் தன்பாலின சேர்க்கையாளர்களிடையேவும், ஆண் மற்றும் பெண் இருபாலினச் சேர்க்கையாளர்களிடையேவும், ஆணுடன் இணை சேரும் ஆண்களிடையேவும் அதிகமாக அடையாளம் காணப்பட்டது.

இப்போது பரவி வரும் க்ளேடு ஒன்றும் பெரும்பான்மையாகப் பாதுகாப்பற்ற இணைசேர்தலால் பரவுவது கண்டறியப்பட்டாலும் உடலும் உடலும் தோலோடு உரசுவதாலும் இருமுவதாலும் தும்முவதாலும் பரவுவதும் கண்டறியப்பட்டுள்ளது இந்த வைரஸ் மீது சற்று கவனத்தை அதிகரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஒரு கிருமித் தொற்று கொள்ளை நோயாக உருவாகத் தொடர்ந்து மனிதர்களிடையே பரவும் தன்மை அதிகமாக இருக்க வேண்டும். இதை ஆர்-நாட் ( R-0) என்போம்.

ஆர்-நாட் ஒன்றுக்கு கீழ் இருந்தால் அந்த தொற்று நிலையால் கொள்ளை நோயாக மாற முடியாது. ஒன்றுக்கு மேல் இருந்தால் அது கொள்ளை நோயாக உருமாறும். ஆர்-நாட் அதிகமாக அதிகமாக மிக எளிதாகப் பரவும் என்று அர்த்தம். 2022க்கு முன்னர் வரை எம் பாக்ஸின் ஆர் நாட் 0.32 அதாவது ஒன்றுக்கு கீழ் இருந்தமையால் அதனால் காங்கோவை விட்டு வெளியே வர முடியவில்லை. 2022 -2023 காலகட்டங்களில் எம்பாக்ஸ் ஆர் நாட் 2 க்கு மேல் இருந்தது. குறிப்பாக இந்தப் பரவும் தன்மை , ஆண் தன்பாலின உறவாளர்களிடம் அதிகமாக இருந்ததையும் ஆய்வுகள் பதிவு செய்கின்றன.

வயது வந்தவர்களிடையே இந்தத் தொற்று அதிகமாகக் கண்டறியப்படுகிறது. குழந்தைகளிடையே தீவிரமாக வெளிப்படுவதில்லை. தற்போது இந்த பிரச்சனைக்குரிய க்ளாடு ஒன் பி வைரஸ் கென்யா, ருவாண்டா , உகாண்டா , புருண்டி, ஸ்வீடன், பாகிஸ்தான் (4 தொற்றாளர்கள்) , கண்டறியப்பட்டுள்ளனர். பிலிபைன்ஸில் – க்ளாடு டூ வகை தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார். எனினும் அவர் எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாத நிலையில் சமூகத்திடம் இருந்து தொற்றைப் பெற்றிருப்பதால் மனிதர்களிடையே தொற்று பரவுவது என்பது அங்கே சமூகப்பரவல் நிலையை எட்டியிருப்பது புலனாகிறது. இந்தியா தனது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

மருத்துவர்களுக்கு நாடு தழுவிய எம் பாக்ஸ் நோய் கண்டறியும் சிகிச்சை தரும் நெறிமுறைகள் பகிரப்பட்டுள்ளன. மக்களும் அம்மை போல ஏற்படும் எம் பாக்ஸ் அறிகுறி வந்தால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பொதுச் சுகாதார ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். கர்ப்பிணிகள், முதியோர், இணை நோய்கள் கொண்டவர்கள், எதிர்ப்புச் சக்தி குன்றியோர் கட்டாயம் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பது தொற்றுப் பரவலை நிறுத்தும். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அத்தகையோரை நாடுபவர்கள், பல ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால் எச்சரிக்கை தேவை.

எம் பாக்ஸ் தொற்று கண்டவர் இருமும் போதும் தும்மும் போதும் உடலோடு உடல் தோலோடு தோல் உரசுமாறு இருக்கும் போது பிறருக்குப் பரவும். தொற்று கண்டவர் உடலில் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து சருகாகும் மட்டும் தொற்றை அவர் பரப்பிக் கொண்டிருப்பார். தற்போது பரவும் க்ளாடு ஒன் பி வகையில் இத்தகைய கொப்புளங்கள் இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கிறது என்றும் அதனால் நோயாளி கூறாமல் வெளியே தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் தெரிகிறது. கவனம் தேவை.

சரி இந்த பிரச்சனையை முற்றிலுமாக ஒழிக்க வழி உண்டா? உண்டு. வளர்ந்த உலக நாடுகள் சேர்ந்து அவர்களது கூட்டமைப்பின் மூலம் சின்னம்மை மற்றும் எம் பாக்ஸ் தடுப்பூசியைக் கொடையாக வழங்கி காங்கோ நாட்டில் உள்ள அனைவருக்கும் தொடர்ந்து அந்தத் தடுப்பூசியை அந்த நாட்டினருக்கு வழங்கி வந்தால் இந்த நோய் வெளிவராமல் இருக்கும். வளர்ந்த உலக நாடுகள் மனது வைக்க வேண்டும். அப்படியே வைத்தாலும் காங்கோவில் நிலவும் உள்நாட்டுப் போர் கலவர சூழ்நிலை மக்களிடம் இந்த நோய் குறித்து உள்ள மூடநம்பிக்கைகள் ( பேய் பிடித்துள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர்) ஆகியவை சரியாகி தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றியடைய வேண்டும். இதன் மூலம் காங்கோ நாட்டில் எம் பாக்ஸ் ஒழிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவும் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும்.

எங்கோ ஒரு நாட்டுக்கு நடக்கிறது என்று உலக நாடுகள் அமைதி காக்காமல் அனைவரும் இறங்கி ஒருமித்து காங்கோ நாட்டுக்குச் சிகிச்சை அளித்தால் உலகமெனும் கிராமம் அமைதியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தேவை கொஞ்சம் கருணையும் சக உயிர்கள் மீது அக்கறையும் தான்” என்று எழுதி இருக்கிறார்.

Leave a Response