மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியது.
இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த மங்கி பாக்ஸ் கொரோனா அளவுக்கு ஆபத்தானதா.. அதேபோல மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..?
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகை மொத்தமாகப் புரட்டிப் போட்டது அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து நாம் மீண்டு வரவே பல காலம் ஆனது.
இதற்கிடையே இப்போது கொரோனாவுக்கு அடுத்து மங்கி பாக்ஸ் என்ற ஒரு வகை மோசமான பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. இது எங்கு அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்துமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு காங்கோ குடியரசில் முதலில் வெடித்த இந்த மங்கி பாக்ஸ் மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிளேட் 1 பி என்ற திரிபு காரணமாகவே இப்போது இந்த மங்கி பாக்ஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஆப்பிரிக்காவுக்குள் பரவி வந்த இந்த மங்கி பாக்ஸ் இப்போது, ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் பரவ தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கும் பாகிஸ்தான் நாட்டில் 3 பேருக்கும் இந்த மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் வேகமாகப் பரவும் திரிபு தான் இந்த நாடுகளில் உறுதியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் பொதுமக்களைப் பாடாய்ப்படுத்தி வரும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிடும் மிக ஆபத்தான எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்பு கடைசியாக 2022இல் இந்த மங்கி பாக்ஸ் சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. இந்த மங்கி பாக்ஸ் வைரஸ் கிளாட் I மற்றும் கிளேட் II என்று இரண்டு வகைகளில் உள்ளன.
கடந்த 1958ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளில் தான் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1970ஆம் ஆண்டு ஒன்பது மாத சிறுவனுக்கு இது ஏற்பட்டது. மனிதர்களிடையே மங்கி பாக்ஸ் ஏற்படுவது அதுவே முதல்முறையாகும். அதன் பிறகு அவ்வப்போது பரவினாலும் ஆப்பிரிக்காவிற்குள்ளேயே இது பரவும்.
இப்போது தான் முதல்முறையாக ஆப்பிரிக்காவுக்கு வெளியே ஐரோப்பிய நாடுகளிலும் பரவி இருக்கிறது. இப்படி மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது கொரோனாவை போல பெருந்தொற்றாக மாறுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.
கொரோனாவுக்கு பிறகு உலகில் பரவும் மிக மோசமாக வைரஸ் பாதிப்பாக இது இருக்கிறது. கொரோனா காலத்தில் உலகெங்கும் லாக்டவுன் போடப்பட்டது, மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு, சமூக இடைவெளி என்று நாம் பல இன்னல்களை எதிர்கொண்டோம். அதில் இருந்து மீண்டு வருவதே மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. மங்கி பாக்ஸ் கொரோனா போலப் பரவினால் ஆசியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிலைமை மோசமாகும். பிறகு மீண்டும் லாக்டவுன் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.