வங்கிப் பணியை விட்டு வங்கி ஊழியர்கள் கொத்துக்கொத்தாக வெளியேறுவது ஏன்? – அதிர்ச்சி ரிப்போர்ட்.

நம் நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் என ஏராளமான வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளிலும் நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என்று 2 பிரிவுகளில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். நம் நாட்டை பொறுத்தவரை வங்கி வேலை என்பது கவுரவமிக்க பணியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொதுத்துறை வங்கி பணிக்கு அதிக மவுசு உள்ளது.

இதனால் தான் ஒவ்வொரு ஆண்டு வங்கி தேர்வுக்கு தயாராகி வரும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டை பொறுத்தவரை வங்கி பணியாளர்கள் ராஜினாமா செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் வங்கிகளின் அட்ரிஷன் ரேட் என்பது உலகளவில் அதிகமாக உள்ளதாம்.அட்ரிஷன் ரேட் என்பது ஒரு நிறுவனம் அல்லது வங்கியில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் வேலையை விட்டு செல்வோரின் எண்ணிக்கையை குறிக்கும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் அந்த நிறுவனம் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து தூக்குவது மற்றும் ஊழியர்களே பணியை ராஜினாமா செய்துவிட்டு செல்வதன் எண்ணிக்கை அடிப்படையில் தான் அட்ரிஷன் ரேட் என்பது அமையும். அந்த வகையில் தற்போது இந்திய வங்கிகளில் அட்ரிஷன் ரேட் என்பது அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் வங்கிகளில் இருந்து ஏராளமானவர்கள் பணியை விட்டு செல்கின்றனர் அல்லது பணியை விட்டு நீக்கப்படுகின்றனர்.

மேலும் சமீபத்தில் புள்ளிவிபரம் ஒன்றின்படி இந்தியாவின் நிதித்துறையில் அட்ரிஷன் ரேட் என்பது உலக சராசரியை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பெரிய நாடுகளை விட இந்தியாவில் அட்ரிஷன் ரேட் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி சமீபத்தில் மட்டும் இந்தியாவில் பல ஆயிரம் வங்கி பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்பது வங்கிகள் போடும் பிரஷர் தான்.

அதாவது நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பலரும் முதல் முறையாக வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர். இதனால் புதிய வங்கி கணக்கின் மூலம் வாடிக்கையாளர்களை பெறுவதில் அதிக போட்டி உள்ளது. இதற்கான பணி என்பது இளம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு டார்க்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் மக்களின் வாழ்க்கை முறை என்பது முற்றிலுமாக மாற்றபட்டுள்ளது. பலரும் சொந்தமாக தொழில் தொடங்குகின்றனர். இதற்காக பெருமளவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். இப்படி கடன் வாங்குவோரில் பலரும் அதனை திரும்ப செலுத்துவது இல்லை. இது வங்கியின் மூத்த அதிகாரிகள் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமின்றி வங்கி மேலிடம் மூலம் பிரஷர் தரப்படுகிறது. இதனால் வங்கி பணியாளர்கள் பலரும் வேலையை விட்டு செல்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களில் அட்ரிஷன் ரேட் என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் என்பது சம்பள முரண்பாடு. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உயர் பதவிகளில் இருப்பவர்களை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் கீழ்மட்ட அளவில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக தனியார் வங்கிகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்துக்கும், உயரதிகாரிகளின் சம்பளத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இதனால் சம்பளத்தை நோக்கி ஊழியர்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக இளம் வயதில் பணிக்கு சேர்வோர் வேலை அனுபவம் பெற்ற பிறகு பலரும் இன்னொரு வங்கியை நோக்கி பயணிக்கின்றனர். ஆனால் கொஞ்சம் வயதானவர்களால் சட்டென இன்று வங்கி அல்லது நிதி நிறுவனத்தை நோக்கி செல்ல முடியாது. இவர்களுக்கு முறையான பயிற்சி என்பது தேவை. ஆனால் உரிய முறையிலான பயிற்சி என்பது வழங்கப்படுவது இல்லை.

அதாவது நம் நாட்டில் நிதியை கையாளும் நிறுவனங்கள், வங்கிகள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. ஆனால் இதுபற்றிய விஷயங்களை வங்கி மேலாளர்கள் புதிதாக பணியில் சேருவோருக்கு முறையாக தெரிவிப்பது இல்லை. இதனால் வங்கி பணியில் சேர்ந்தவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. ஒரு கட்டத்தில் வங்கி பணியாளர்களுக்கு இதுபற்றி தெரிவிக்கும்போது அவர்கள் வேலையை விட்டு விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் இன்னொரு காரணமாக பாலினம் மற்றும் சாதி பாகுபாடு கூறப்படுகிறது. அதாவது ஏயோன் நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி நம் நாட்டில் 13 பெண் ஊழியர்களில் ஒருவருக்கு மட்டுமே பதவி உயர்வு என்பது வழங்கப்படுகிறது. இந்த பதவி உயர்வு பல பெண்களுக்கு கேள்விக்குறியாகி விடுகிறது. சாதி, அவர்கள் சார்ந்த பரம்பரை அடிப்படையில் பலரும் பதவி உயர்வை பெற முடியாத நிலை உள்ளது. இதுவும் பணியாளர்கள் வேலையை விட்டு செல்ல முக்கிய காரணமாக உள்ளது.

இதுபற்றி பெங்களூரை சேர்ந்த Xpheno நிறுவனத்தின் இணை நிறுவனர் கமல் காரந்த் கூறுகையில், ”நம் நாட்டுக்கான முதலீட்டாளர்கள் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. புதிய வணிகத்தை கொண்டு வர வங்கிகள் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லும் என நம்புகின்றனர். இருப்பினும் பிரஷர் என்பது வங்கியில் பணியாற்றும் இளம் வயதினர் மேல் விழுகிறது. இதனால் அவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சனை தொடங்குகிறது” என்றார்.

இதற்கிடையே தான் பல முன்னணி வங்கிகள் சமீபத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை 600 முதல் 700 வரை குறைத்துள்ளன. இது உண்மையில் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. அதேவேளையில் கடந்த நிதியாண்டை எடுத்து கொண்டால் சில வங்கிகளில் அட்ரிஷன் ரேட் என்பது சரிய தொடங்கி உள்ளது. ஆக்சிஸ் வங்கியின் அட்ரிஷன் ரேட் 34.8 சதவீதத்தில் இருந்து 28.8 சதவீதமாக குறைந்துள்ளதாக மேக்வாரி குழும புள்ளிவிபரம்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கிகளிலும் அட்ரிஷன் ரேட் என்பது சரிந்துள்ளது. இந்த வங்கிகளில் பணியாளர்களை தக்க வைக்கவும், பயிற்சிக்கு மேலாளர்கள் நியமித்ததும் தான் முக்கிய காரணமாகும்.

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசும் இந்த அட்ரிஷன் ரேட் அதிகரிப்பு பற்றி பேசியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த பேட்டியில் வங்கிகளில் அட்ரிஷன் ரேட் குறைய நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளில் நிலவும் சிக்கல்களை தீர்க்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் வங்கி பணியை விட்டு வெளியேறும் பணியாளர்களை தடுப்பது என்பது தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனை ரிசர்வ் வங்கியும் கூட உணர்ந்துள்ளது நிலையில் அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது தான் பேங்கர்ஸ்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Leave a Response