“தான் கட்சி ஆரம்பித்த போதும் மாநாடு நடத்த இடம் கிடைக்காமல் சிரமப்பட்டேன், அதேபோல் தம்பி விஜய்க்கும் சிக்கல்கள் வரலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் நடத்தும் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுக்கிறது.
இன்னொரு பக்கம் விஜய்யின் அரசியல் என்ட்ரியும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோட் வெளியானதும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய்.
அதன்பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கவுள்ள தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார். விஜய்யின் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார் விஜய். அப்போது பேசிய தளபதி விஜய், மாணவர்கள் அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போல நல்ல அரசியல் தலைவர்கள் இந்த சமூகத்திற்கு தேவை என பேசியிருந்தார் விஜய். அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோட் ரிலீஸுக்குப் பின்னர் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த விஜய் பிளான் செய்துள்ளாராம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ரசிகர்களையும் தொண்டர்களையும் அழைத்து, மாநில மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான முதற்கட்ட பணிகளை தவெக நிர்வாகிகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருந்தார் தளபதி விஜய். ஆனால், அதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது திருச்சியில் நடைபெறவிருந்த தவெக மாநாடு, தற்போது விக்கிரவாண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்லூரி அருகே விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது செப்டம்பர் 22ம் தேதி நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சி உள்ளது, இதனால் தான் தவெக முதல் மாநாட்டை அங்கு நடத்துவதற்கு முடிவு செய்திருந்தார் விஜய். அதேபோல் லட்சக்கணக்கான ரசிகர்களையும் தொண்டர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க வேண்டும் என விஜய் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனால் திருச்சியில் மாநாடு நடத்தினால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வேறு வழியில்லாமல் திருச்சிக்குப் பதிலாக விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளதாம் விஜய்யின் தவெக & டீம். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்கிரவாண்டி மாநாடு முடிந்த பின்னர், 4 மண்டல மாநாடுகளை நடத்தவும் தவெக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதுதவிர 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள், நடை பயணம் என அடுத்தடுத்து பல திட்டங்களுடன் அரசியலில் களமிறங்க ரெடியாகி வருகிறார் தவெக தலைவர் விஜய்.