மாணவிக்கு, மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே அரங்கேறிய கொடூரம்!

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி, கருத்தரங்கு வளாகத்தில் மர்மமான முறையில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்படுவதற்கு முன், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து விசாரித்த போலீசார், குற்றவாளி சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராயை பிடிப்பதில், அவரது, புளூடூத் இயர்போன் கருவி முக்கிய ஆதாரமாக இருந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறும் போது பெண் பயிற்சி டாக்டரின் உடலை கைப்பற்றிய பின், கல்லூரி முழுதும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை குழுவாக ஆய்வு செய்தோம். அதிகாலை 4:00 மணி அளவில், சஞ்சய் ராய் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.ஆனால் வெளியே வந்த போது, அவரிடம் புளூடூத் இயர்போன் இல்லை.

குற்றம் நடந்த இடத்தில், உடைந்த நிலையில், புளூடூத் இயர்போன் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இது சஞ்சய் ராய்க்கு சொந்தமானது என தெரியவந்தது.

தன் மீதான குற்றச்சாட்டை முதலில் மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். அவரது மொபைல் போனில் ஆபாச படங்கள் ஏராளமாக இருந்தன. மேலும், அவர் மீது பாலியல் சீண்டல் புகார்களும் ஏற்கனவே உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயிற்சி மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரக் கோரி டில்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டில்லியில் வெளி நோயாளிகள் பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர் ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்கள், பணியை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில், 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவர் சங்கமும் அறிவித்துள்ளது.

இதில் மவுனம் கலைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என நேற்று முன்தினம் உறுதி அளித்தார்.

Leave a Response