திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பந்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மூத்த மகளான செல்வ தேவியை தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த நம்பி ராஜா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார்.
மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நம்பி ராஜா, கிருஷ்ணனின் இரண்டாவது மகளான பல் மருத்துவர் நீலவேணியிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது.
இதை அறிந்த நீலவேணியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் கள்ளக்காதல் ஜோடியான இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பல் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்ற நீலவேணி வீட்டிற்கு திரும்பவில்லை.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நம்பிராஜா தனது கொழுந்தியாளான நீலவேணியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் அழைத்து பேசினாலும் இருவரும் பிரிந்து செல்ல தயாராக இல்லாததால் ஊரை விட்டு நாகர்கோவில் சென்றுள்ளனர்.
பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலவேணிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பி ராஜா நீலவேணியின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்று நம்பிராஜா தனது மனைவியான செல்வதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு, உனது தங்கை உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் அவரை பார்க்க விரும்பினால் உடனடியாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதை ஒட்டி செல்வதேவியின் தந்தை கிருஷ்ணனிடம் தகவலை கூறியதை தொடர்ந்து கிருஷ்ணன் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, இன்று காலை நீலவேணி உயிரிழந்ததாகவும் அவரது கணவர் எனக்கூறி நம்பிராஜா நீலவேணியின் சடலத்தை பெற்று அமரர் ஊர்தியில் நாகர்கோயில் அருகே புளியடி பகுதியில் உள்ள அரசு மின்மயானத்தில் தகனம் செய்ததாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் நாகர்கோவிலில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நம்பிராஜா மீது புகார் அளித்துள்ளார்.
கொழுந்தியாளை கடத்திச் சென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்பு மருத்துவமனையில் அனுமதித்து உயிரிழந்த போது யாருக்கும் தெரியாமல் உடலை தகனம் செய்த நம்பிராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.