பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் அணுகுண்டுகள் தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருளான கலிஃபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..
இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.850 கோடியாகும். இதை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்துக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாகக் கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு எப்போதும் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது.. முறையாகக் கையாளவில்லை என்றால் கேன்சர் பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதனால் கதிரியக்கம் சார்ந்த பொருட்களுக்கு எப்போதுமே பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். இதற்கிடையே பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் என்ற பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் கதிரியக்க பொருளான கலிஃபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..
சுமார் 50 கிராம் கலிஃபோர்னியத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.850 கோடியாகும்.
அம்மாநில சிறப்பு அதிரடிப் படை குச்சாய்கோட் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையின் போது இதை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாகக் கடத்திய மூன்று போரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குச்சாய்கோட் பல்தேரி சோதனைச் சாவடி அருகே வழக்கம் போல வாகனச் சோதனை செய்து கொண்டு இருக்கும் போது 50 கிராம் எடை கொண்ட கதிரியக்க கலிஃபோர்னியத்தை கைப்பற்றியதாக கோபால்கஞ்ச் எஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். இது ஒரு கிராமே சர்வதேச சந்தையில் ரூ. 17 கோடிக்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தம் 50 கிராம் கலிஃபோர்னியம் ரூ.850 கோடிக்கு விலை போகுமாம்.
இந்த கதிரியக்க பொருள் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது. இதை விற்கவும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி இவர்கள் எப்படி சாதாரணமாக காரில் வைத்துக் கடத்தி வந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தக் கலிஃபோர்னியம்கல் அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது. மேலும், மூளை புற்றுநோய் சிகிச்சை உட்பட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கும் இது மிகப் பெரியளவில் உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் சோட்டலால் பிரசாத் என்பவர் முதன்மை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைதாகியுள்ள மற்ற இருவர் சந்தன் குப்தா மற்றும் சந்தன் ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு கலிபோர்னியம் பற்றி எல்லாம் பெரிதாகத் தெரியாதாம். முதன்மை குற்றவாளியான சோட்டலால் பிரசாத்தே இதற்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். அவர் பல நாட்களாகவே தன்னிடம் இருந்த கலிபோர்னியத்தை விற்க முயன்றுள்ளார். இப்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இப்போது போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.