சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக சுப்புலெட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தோவாளை சார்பதிவாளர் விடுமுறையில் சென்றார். அப்போது தோவாளை பொறுப்பு சார்பதிவாளர் அதிகாரியாக சுப்புலெட்சுமி நியமனம் செய்யப்பட்டார். அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் நிலுவையில் இருந்த நிலம் தொடர்பான 20 பத்திரங்களை அவர் முறைகேடாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
விடுமுறையில் சென்ற தோவாளை சார்பதிவாளர் மேகலிங்கம் பணிக்கு வந்தபோது போதிய ஆவணங்கள் இல்லாமல் தனது இணைய பக்கத்தில் பத்திரப்பதிவு செய்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மேகலிங்கம் மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சார்பதிவாளர் சுப்புலெட்சுமி, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனராஜா உதவியுடன் இந்த பத்திரபதிவுகளை முறைகேடாக பதிவு செய்தது தெரியவந்தது. மேலும் இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலக ஒப்பந்தபணியாளர்கள் நம்பிராஜன், ஜெயின்ஷைலா, டெல்பின் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சார்பதிவாளர் சுப்புலெட்சுமி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். சுப்புலெட்சுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.