சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும், அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டு வந்தது. இந்நிலையில், தன்னை கைது செய்த போது அது போன்ற சில ஆவணங்களை அமலாக்கத்துறை குறிப்பிடாத நிலையில், இப்போது மட்டும் எங்கிருந்து அந்த ஆதாரங்கள் வந்தது என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியது.
மேலும், அந்த ஆதாரத்தை காட்டுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையின் போதே செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவை அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயப் ஹுசைன் கூறுகையில், இந்த வழக்கை உணவு இடைவேளைக்கு பிறகு விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என வாய்தா கேட்டார். அப்போது நீதிபதிகள், ஒரே விஷயத்தை உணவு இடைவேளைக்கு பிறகு இந்த கோர்ட் விசாரிப்பதை ஏற்க முடியாது. வாதாடுவதற்கு தயாராக இல்லை எனக்கூறி விசாரணையை தள்ளிவைக்க கோருவது என்ன மாதிரியான செயல் என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் பென் டிரைவில் இல்லாத ஒரு ஆவணத்தை காட்டுவதாக கூறி இதுவரை அமலாக்கத்துறை 8 முறை வழக்கை ஒத்திவைத்துள்ளதாக கூறினார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.