அன்றே கணித்த இஸ்ரோ..! கண்டுகொள்ளாமல் விட்ட கேரள அரசு..?

வயநாடு நிலச்சரிவால் (Wayanad Landslide) ஏற்பட்ட பரவலான சேதம் மற்றும் பேரழிவு குறித்த இதுவரை வெளியான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் சொல்லாத உண்மைகளை..

இஸ்ரோ செயற்கைக்கோள்களால் (ISRO Satellites) எடுக்கப்பட்ட ஹை ரெசல்யூஷன் புகைப்படங்கள் (High resolution images) சொல்கின்றன.

வயநாட்டில் தொடர்ச்சியான முறையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது; மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதற்கிடையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சில சாட்டிலைட் இமேஜ்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான, ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (National Remote Sensing Center) ஆனது, அதன் மிக உயர்ந்த தெளிவுத்திறன் (Highest resolution) கொண்ட கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோளையும் (Cartosat-3 optical satellite), மேகக்கூட்டத்தின் வழியாக பார்க்கும் திறன் கொண்ட ரிசாட் செயற்கைக்கோளையும் (RISAT satellite) பயன்படுத்தி இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவானது கடல் மட்டத்தில் இருந்து 1550 மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் பழைய நிலச்சரிவுக்கான ஆதாரம் இருப்பதாகவும் இஸ்ரோ கூறுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்த ‘இந்தியாவின் நிலச்சரிவுகளுக்கான அட்லஸ்’ (Landslide Atlas of India) ஆனது கேரளாவை வயநாடு பகுதியை நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாற்றியது. அதாவது வயநாடானது ஆபத்தான பகுதியாக இருக்கிறது என்கிற எச்சரிக்கை கடந்த ஆண்டே விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் லேண்ட்ஸ்லைட் அட்லஸ் ஆப் இந்தியா என்பது 20 ஆண்டுகளில் நிகழ்ந்த 80,000 நிலச்சரிவுகளை ஆவணப்படுத்துகிறது. இந்த ஆவணத்தின்படி புதுமலை, வயநாடு மாவட்டம் மற்றும் கேரளாவின் பெரும்பகுதிகள் நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக (Being prone to landslides) கணிக்கப்பட்டு “சிவப்பு நிறத்தில்” குறிக்கப்பட்டும் உள்ளன.

லேண்ட்ஸ்லைட் அட்லஸ் ஆப் இந்தியா குறித்து, 2023 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில், இஸ்ரோவின் தலைவர் ஆன டாக்டர் எஸ் சோமநாத், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலச்சரிவு சூழ்நிலை மற்றும் நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகள் குறித்தும், பேரிடர் மேலாண்மை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இந்த அட்லஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாக கூறி இருந்தார்.

மேலும் இஸ்ரோ செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட படங்கள் வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பேரழிவை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஜூலை 31 ஆம் தேதியன்று, உயர் தெளிவுத்திறனில் எடுக்கப்பட்ட ரிசாட் சார் புகைப்படங்கள் (RISAT SAR Images) ஆனது க்ரவுன் ஸோனில் (Crown Zone) இருந்து ரன் அவுட் ஸோனின் (Run out zone) இறுதி வரை குப்பைகள் எந்த அளவிற்கு சரிந்துள்ளது என்பதன் முழு அளவை காட்டுகின்றன.

இந்த சரிவின் தோராயமான நீளம் 8 கி.மீ ஆகும். க்ரவுன் ஸோன் என்பது பழைய நிலச்சரிவை மீண்டும் செயல்படுத்துவதாகும். இந்த நிலச்சரிவின் முக்கிய ஸ்கார்ப்பின் அளவு – 86,000 சதுர மீட்டர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் நழுவி உள்ளது. இதனால் ஏற்பட்ட “குப்பைகள்” கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே பாய்ந்து, நகரங்களையும் குடியிருப்புகளையும் சர்வநாசம் செய்துள்ளது.

நிலச்சரிவானது இருவாணிப்புழா ஆற்றின் போக்கை விரிவுபடுத்தி கரைகளை உடைத்துள்ளது. இதன் விளைவாக கரையோரங்களில் இருந்த வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இணையத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்த “முன்னும் – பின்னும்” புகைப்படங்கள் தற்கால சூழ்நிலைகளை குறித்த உண்மைகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, ஆனால் இஸ்ரோவின் புகைப்படங்கள் கடந்த கால எச்சரிக்கை மற்றும் வருங்கால முன்னெச்சரிக்கை குறித்த உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

Leave a Response