வயநாடு நிலச்சரிவு தங்கர் பச்சான் ஆதங்கம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 280க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே காணாமல் போனவர்களின் கை தனியாக, கால் தனியாக, உடல் தனியாக மீட்கப்பட்டு வருவது குறித்த செய்திகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த நாடும் இந்த நிலச்சரிவில் பலியானவர்களுக்காக தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தின் கடைகோடி மாவட்டமும், கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டமான கன்னியாகுமரியில், மலைகளை வெட்டி கனிம வளங்கள் எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், தற்போது இந்த விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை வெட்டி, கனிம வளங்களை கொள்ளை அடித்ததன் காரணமாகத்தான் கேரளாவில் இப்படியான ஒரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் வருங்காலத்தில் கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மாவட்டங்களிலும் இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இயற்கையின் முக்கியத்துவத்தை அரசாங்கமும் மக்களும் மதிக்காத வரை இப்படிப்பட்ட பெருந்துயர்களுக்கு முடிவே இல்லை! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மலைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் வயநாடு போன்ற சீர்கேடுகளைத்தான் விதைத்து வைத்திருக்கின்றோம்!

பணப் பேராசை கொண்ட அரசாங்கத்தையும், மக்களையும் புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் குறித்த அறிவு இல்லாதவர்களிடம் இனி எவை குறைத்து பேசுவது?” என்று தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response