மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் சோனுருளி கிராமத்தில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு கடந்த சனிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக ஒருவர் சென்றிருந்தார். அப்போது ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அவர் அங்கு சென்று பார்த்த போது ஒரு பெண் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்தப் பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கும். அவரின் உடமைகளை காவல்துறையினர் சோதித்தனர்.
அப்போது அமெரிக்க பாஸ்போர்ட் நகல் மற்றும் இந்திய ஆதார் அட்டை ஆகியவைகள் இருந்தது. அதோடு மருந்து மாத்திரைகள் பரிந்துரை செய்யும் சீட்டும் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்தனர். அவருடைய பெயர் லலிதா காயி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் வனப்பகுதியில் பல நாட்களாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் உணவு மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருந்துள்ளார். இதனால் பசியால் உடல் மெலிந்து காணப்படும் அவரிடம் மேற்கொண்டு காவல்துறையினரால் விசாரணை நடத்த முடியவில்லை. மேலும் ஆதார் கார்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முகவரி இருந்ததால் காவல்துறையினர் தமிழ்நாட்டுக்கு விரைந்துள்ளனர்.