மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா உசேன் நண்பர் ரஞ்சித்(32) என்பவர் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுடைய தோழிகளான சசிகலா(30),பபிதா(29) ,வினோதினி(30) ஆகிய 3 பேரும் பியூட்டி பார்லர் நடத்தி வருகின்றனர். இதில் சசிகலாவை சரவணன் காதலித்து வந்தார்.
இந்நிலையில் பபிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி காஞ்சரம்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் நடைபெற்றது. இதற்காக ராஜா உசேன், ரஞ்சித் தங்களுடைய தோழிகளை காரில் ஏற்றிக்கொண்டு உணவகத்திற்கு சென்றனர். இதனை அறிந்து கொண்டு உணவகத்திற்கு வந்த சரவணன் மற்றும் காதர் இஸ்மாயில், ரஞ்சித் உடன் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகராறில் கோபமடைந்த ரஞ்சித் தான் வைத்திருந்த கத்தியால் காதர் இஸ்மாயில் மற்றும் சரவணனை குத்தினார். இதில் காதர் இஸ்மாயிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் உணவக ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து காதர் இஸ்மைல் மற்றும் சரவணனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காதர் இஸ்மாயிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.