சிங்கம் II – விமர்சனம்!

singa

சிங்கம் படத்திற்கு பின் ரத்த சரித்திரம், ஏழாம் அறிவு, மாற்றான் என எந்த படமுமே சூர்யாவிற்கு பெயர்சொல்லும்படி அமையவில்லை. இந்த நிலையில் தன் ஆஸ்தான இயக்குனர் ஹரியோடு கைகோர்த்து மீண்டு(ம்) வர சூர்யா செய்திருக்கும் முயற்சி தான் இந்த சிங்கம் 2.

சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு செல்வது போல் கிளம்பும் சூர்யா, ஸ்கூலில் என்.சி.சி மாஸ்டராக வேலையை செய்து கொண்டே துறைமுகத்தையும், சிட்டியையும் கவனிக்கிறார். அப்போது கடல்வழியாக கடத்தப்படுவது ஆயுதங்கள் அல்ல, பெருமளவு போதைப் பொருள்கள் என்ற உண்மை, அதில் உள்ளூர் தாதாக்கள் இருவருடன் வெளிநாட்டு கடத்தல் மன்னன் டேனியின் பங்கும் இருப்பது தெரிய வருகிறது. அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு ஆதாரத்துடன் குற்றவாளிகளை கைது செய்ய காத்திருக்கிறார் சூர்யா.

அதற்குள் உள்ளூரில் சாதிகலவரம் தலையெடுக்க, அதனை ஒடுக்க பதவியில் அமர்கிறார் சூர்யா. அதன்பின் நடக்கும் பூனை-எலி துரத்தல் கதை தான் சிங்கம் 2. அந்த கடத்தல் கும்பலை தென்னாப்பிரிக்கா வரை விரட்டிச் சென்று எப்படிப் பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும், அதிரடியாகவும் சொல்லியிருக்கிறார் ஹரி.

படம் முழுக்க சூர்யாவின் ஒன் மேன் ஷோ, படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் சூர்யாதான் மனதில் பாய் போட்டு படுக்கிறார். ஒவ்வொரு சீனிலும் மாஸ் காட்டுகிறார். ஒரே ஆளாக நின்று மொத்த லோக்கல் ரவுடிகளையும், கடத்தல் கும்பலையும் அடித்து நொறுக்குகிறார்.

அனுஷ்கா, ஹன்ஷிகா என இரண்டு ஹீரோயின்கள். அனுஷ்காவுக்கு கிளாமர் ரோல் மட்டுமே இந்த படத்தில். கவர்ச்சி உடையில் பாடல்களுக்கு நடனமாட விட்டுள்ளார்கள். போன பாகத்தில் கல்யாணம் ஆகாமல் இருந்த சூர்யா – அனுஷ்காவின் காதல் இந்த படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிகிறது.

ப்ளஸ்டூ படிக்கும் பள்ளி மாணவியாக ஹன்சிகா. அனுஷ்காவை விட அதிக நேரம் இவரே வருகிறார். சூர்யா மீது அவர் வைக்கும் காதலும், அவரின் முடிவும் ரசிகர்களை அனுதாபப்பட வைக்கிறது.

காமெடிக்கு இன்ஸ்பெக்டர் எரிமலையாக விவேக், சூசையாக வரும் சந்தானம் இருவரும் இருக்கிறார்கள். விவேக் ரோல் ஓகே. சந்தனத்தின் ரோல் திணிக்கபட்ட உணர்வு.

சர்வதேச போதை மருந்து கடத்தல்காரன் டேனியாக வரும் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி மிரட்டலாக அறிமுகமாகிறார். ஆனால் முக்கியத்துவம் மிகவும் குறைவு. சில காட்சிகளில் வந்து போகிறார். மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி, ரகுமான், வசீம் கான், விஜயகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ப்ரியன் ஒளிப்பதிவில் உப்பளங்களும், அதன் நடுவில் உள்ள ரோடுகளும், கப்பல் சண்டைக் காட்சிகளும், சிட்டியின் டாப் ஆங்கில் ஷாட்களும்(ஏரியல் ஷாட்) படத்துக்கு புதிய நிறத்தைத் தருகின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சொல்லி கொள்ளும்படி இல்லை. ஏற்கனவே கேட்ட பாடல்களாகவும், மனதில் நிற்காத இசையாகவும் அமைந்து விட்டது. பின்னணி இசை ஓகே.

சிங்கம் படத்தில் இரண்டாம் பாகத்துக்காக ஒரு குறிப்பை விட்டு, இரண்டாம் பாகத்தை தொடங்கியுள்ளார் ஹரி. வேகமான படத்தில் தேவையில்லாத பாடல்கள் வந்து தடை செய்கின்றன. தேவையில்லாத சில காட்சிகளை நீக்கி, படத்தை இன்னும் வேகமாக்கி இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.