கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சிறுமிகளுக்கு அப்போது வயது தலா 9 மற்றும் 7 என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த புகார் வந்த நிலையில், அப்போது மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது அந்த இரண்டு சிறுமிகளுக்கும் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிகளை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த பிரம்மதேசம் போலீசார், அந்த சிறுமிகளின் உறவினர்களே, மிட்டாய் வாங்கி கொடுத்து அந்த சிறுமிகளை தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சிறுமிகளின் தாய் மாமா கஜேந்திரன், தாத்தா துரைசாமி மற்றும் பிற உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், இன்று அதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், 2019ம் ஆண்டு அந்த 2 சிறுமிகளை வன்கொடுமை செய்த 15 பேருக்கும் 20 வருட சிறை தண்டனையும், மேலும் தலா ரூ. 32, 000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சிறுமிகள் அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.