முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இரண்டு முறை அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 5 தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் என்பவர் உட்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விவரம் என்ன?
கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பாக புகாரளித்தார். அதில்,’ வெள்ளியணையை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் ஷோபனா, உடன் 4 பேரை அழைத்துக்கொண்டு செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது. அதோடு உண்மையான ஆவணத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, உண்மையான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெற்றுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் வழங்கினர். மேலும் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளார் வழங்கியதாக ‘நான்டிரேசபிள்’ (ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை சமர்பித்தனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி நிலுவையில் இருந்து ஆவணம் விடுவிக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பிலான அந்த 22 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக மறுநாளே என்னிடம் புகாரளித்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்’ என முகமது அப்துல் காதர் குறிப்பிட்டு இருந்தார்.
விசாரணையில் அம்பலமான உண்மை:
புகார் தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது அம்பலமானது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யபட்டுள்ளார்.