50 பேரை ஏமாற்றிய சத்யா கண்ணீர் விட்டு அழுகை

ஈரோட்டைச் சேர்ந்த சத்யா பல ஆண்களிடம் நெருங்கிப்பழகி திருமணம் செய்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

32 வயதான அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த சத்யாவுக்கு, தமிழ்ச் செல்வி என்ற 34 வயது தரகர் உதவியுள்ளார். தமிழ்ச் செல்வி மூலம் திருமணத்துக்காகக் காத்திருக்கும் பலரைப்பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ளார் சத்யா.பின்னர் அவர்களைத் தேடிச்சென்று நட்பு பாராட்டி, தனிப்பட்ட விவரங்களைத் திரட்டுவார். அதன்பிறகு தன் வலையில் விழுந்த ஆண்களைத் திருமணம் செய்து தலைமறைவாகிவிடுவார்.

இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளையருக்கு சத்யா மீது காதல் ஏற்பட்டது.தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இளைஞரின் வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது வீட்டில் வைத்து சத்யாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சத்யாவின் உறவினர்கள் தாலி உள்பட 12 பவுன் நகையை சத்யாவிடம் வழங்கி உள்ளனர்.இதற்கிடையே தான் சத்யா வீட்டில் இருந்து அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது மகேஷ் அரவிந்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மகேஷ் அரவிந்த் தீவிரமாக தனது மனைவி சத்யாவை கண்காணிக்க தொடங்கினார். அப்போது அவர் அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அதோடு அவர் பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை செல்போனில் வைத்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

சத்யா பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முயன்ற போது சத்யாவின் கணவராக மற்றொருவர் பெயர் பதிவாகி இருப்பது இளைஞருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சத்யாவின் சொந்த ஊரில் விசாரித்து இருக்கிறார்

அதில், சத்யாவுக்கு ஏற்கனவே பல பேருடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருக்கும் தகவல் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஒவ்வொருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு, வீட்டில் இருக்கும், நகை, பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சத்யா.இதற்கிடையே தான் திடீரென்று சத்யா மாயமானார்.

சத்யா திருமணம் செய்து சுமார் 15 பேரையும், திருமணம் செய்யாமல் 50-க்கும் மேற்பட்டவர்களையும் ஏமாற்றி இருப்பதாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சத்யாவின் ஏமாற்று வேலையில் ஆடு மேய்ப்பவர், காவல் உதவி ஆய்வாளர், தொழில்அதிபர், சர்வேயர், அரசியல்வாதி என பலர் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனிப்படை போலீசார் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை நேற்று முன்தினம் நள்ளிரவு (ஜூலை 14) பிடித்து தாராபுரம் அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 14) மதியம் சத்யா கைது செய்யப்பட்டார்.

கைது செய்து சத்யாவை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது ஊடகத்தை நோக்கி சத்யா பேசுகையில்,”நான் வெளியே வந்து, அனைத்து ஆதாரங்களையும் காண்பித்து, உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன். தயவுசெய்து எனது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டாம், என்னை மிகவும் கலங்கப்படுத்திவிட்டீர்கள், எனது தாயார் தற்கொலை செய்துகொண்டார் என்ற அளவிற்கு பேசியுள்ளீர்கள், இதற்கு மேல் என்னை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. காசிருப்பவர்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை எல்லோரும் காண்பித்துவிட்டீர்கள்” என்று கண்ணீர்விட்டு அழுதார்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ”செல்போன் சிக்னலை வைத்து சத்யாவை கைது செய்துள்ளோம். மகேஷ் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சத்யா பலரை காதல், திருமணம் செய்து மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் அதன்மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Leave a Response