மூடநம்பிக்கையின் உச்சம் : வயிற்று வலி தீர வேண்டி கோவிலுக்கு வந்த வரை கோடாரியால் வெட்டிய சம்பவம்

வயிற்று வலியை குணப்படுத்த வேண்டி வந்த இளைஞரின் வயிற்றில் பூசாரி கோடரியால் வெட்டிய கொடூரமான மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பூசாரி ஜக்கப்பா: கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டத்தில் மேட குட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காசி லிங்கேஸ்வரா என்ற கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஜக்கப்பா கட்டப்பா என்பவர் பூசாரியாக இருக்கிறார். பாகல்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலாக இது உள்ளது. இந்தக் கோயிலில் ஒரு விசித்திரமான வழிபாடு ஒன்று இருந்து வருகிறது.

அதாவது, பக்தர்கள் தங்கள் உடலில் எங்கேயாவது தீராத வலி இருந்தால், அதை குணப்படுத்த இந்தக் கோயிலுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம். கோயில் பூசாரி ஜக்கப்பாவிடம் தங்களுக்கு உடலில் உள்ள பிரச்சினையை பற்றி சொன்னால், வலி இருக்கும் இடத்தில் கோடாரியால் வெட்டுவாராம்.. அதாவது, வலி இருக்கும் இடத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் பூசாரி வெட்டுவாராம்..

வயிற்று வலிக்காக: வெட்டிய இடத்தில் உடனடியாக மஞ்சள் பொடி போட்டு கட்டி விடுகிறார்கள். பூசாரி வலி இருக்கும் இடத்தில் வெட்டினால் தீராத வலி குணம் அடைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், வயிற்று வலிக்காக கோயிலுக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றில் கோடாரியால் பூசாரி வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில், இளைஞரின் கை கால்களை சிலர் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அப்போது பூசாரி ஜக்கப்பா ஒரு கோடாரியை எடுத்து இளைஞர் வயிற்றில் 2 முறை வெட்டுகிறார். முதல் வெட்டில், ரத்தம் பீறிட்டு கொட்டுகிறது. அப்போது வலி தாங்க முடியாமல் அந்த இளைஞர் அலறுகிறார். ஆனாலும் அவரது கை கால்களை அருகில் இருப்பவர்கள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்கிறார்கள்..

பரவிய வீடியோ: பூசாரி வெட்டிய உடன் வெட்டப்பட்ட இடத்தில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டுகிறார்கள்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் வீடியோவை பார்த்து பலரும் பதைபதைத்து போயுள்ளனர். இது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கைது செய்து விசாரணை: கோயில் பூசாரி ஜக்காப்பா கட்டாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த கால கட்டத்திலும் இது போன்ற கொடூரமான மூட நம்பிக்கையை பின்பற்றுகிறார்களே என காட்டமாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். மனித சமூகம் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. நிச்சயமாக ஒரு காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் மனித சமூகம் குடியேறும் என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இப்படி அறிவியல் துறையிலும் டெக்னாலஜி துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்றும் கூட இத்தகைய மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுவது கொடூரத்தின் உச்சம்.

Leave a Response