காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள்.
இவர்களுக்கு பிஎஸ்சி கணக்குவியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய தனுஷ் என்ற தருண் வயது 21 என்ற மகனும் 11ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு உணவு அருந்த தயாராக இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் போன் செய்து அழைத்ததால் அவர் உணவு அருந்தாமலே வீட்டின் வெளியே வந்துள்ளார். பின்னர் நண்பருடன் பைக்கில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.
தனுஷை கடந்த ஐந்து நாட்களாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்துள்ளனர் அவருடைய மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே அவருடைய புகைப்படத்தை தனுஷின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி தனுஷ்ஷை காணவில்லை என பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட வலது கால் ஒன்றை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுள்ளனர்.
உடனே வாலாஜாபாத் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் க்கு போன் செய்து தகவல் அளித்தின்பேரில் சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கும் போது மழை பெய்த காரணத்தினால் இன்று காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இன்று காலை காவல் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் காவல்துறையினர் பாலாற்றில் இறங்கி ஆற்று மணலில் தனியாக இருந்த காலை கைப்பற்றி அதற்கு உண்டான சடலத்தை தேடினர்.
மிகுந்த தேடலுக்குப் பிறகு சுமார் 7 அடி ஆழத்தில் அழகிய நிலையில் ஒரு வாலிபரின் சடலம் இருந்ததை கண்டெடுத்தனர்.
இந்நிலையில் மகனை காணவில்லை என ருத்திர கோட்டி அளித்த புகாரை வைத்து சம்பவ இடத்துக்கு அவரை அழைத்து வந்து சடலத்தை காண்பித்தனர். அழுகி ஊதிப்போன நிலையில் கிடந்த சடலத்தை கண்டு தன்னுடைய மகன்தான் என உறுதி செய்ய முடியவில்லை.
அதேசமயம் அப்பகுதியில் கிடந்த தனுஷின் காலணியை வைத்து என்னுடைய மகனாக இருக்கலாம் எனவும் கூறியதின் பேரில் வாலாஜாபாத் காவல் துறையினர் சடலத்தையும் , தனியாக கிடந்த காலையும் கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சென்ற ருத்திரகோட்டியும் அவருடைய மனைவி மோகனப்பிரியாவும் இறந்து போனது என்னுடைய மகன்தான் என உறுதி படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் , மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அய்யம்பேட்டை, ஏரி வாய், கோயம்பாக்கம் பகுதிகளில் ஊராட்சி மன்றத்தால் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனுஷின் உறவினர்களிடம் பேசும்போது, கடந்த சனிக்கிழமை அன்று இரவு உணவு அருந்த தனுஷ் உட்காந்த போது அவருடைய நண்பர்கள் அழைத்ததின் பேரில் தன்னுடைய வாகனத்தை வீட்டில் விட்டுவிட்டு நண்பர்களின் பைக்கில் ஏறி சென்றுள்ளார். அன்றிலிருந்துதான் தனுஷ் காணவில்லை. இந்நிலையில் தனுஷை கொலை செய்து பாலாற்றில் புதைக்கப்பட்ட சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது என அழுதனர்.
மேலும் கடந்த வாரம் சில வாலிபர்களுக்கும் தனுசுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதை தொடர்ந்து தான் இந்த கொலை நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
மேலும் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாத தனுஷ் பிஎஸ்சி மேத்ஸ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் தகாத சகவாசத்தின் பேரில் தனுஷை கொலை செய்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது என அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் சோகத்துடன் கூறினார்.