வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு ஒரு குடும்பமே தற்கொலை..

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர்.

இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவியை ரமேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதற்காக தனக்குத் தெரிந்தவர்களிடம் ரமேஷ் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்க ஆரம்பித்தனர். இதனால் ரமேஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

அதோடு தன்னுடைய மனைவி வெளிநாட்டுக்கு சென்றதால் அவரை பிரிந்தும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ரமேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ரமேஷ் மற்றும் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளுபடி இறந்த நிலையில் கிடந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வாழைப்பழத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் அதை சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response