கட்சியினர் அனைவருக்கும் வாய்ப்பூட்டு போட்ட ஜி கே வாசன்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா? பாஜகவுடன் கூட்டணி வைப்பதா? என்பதை முடிவுசெய்ய முடியாமலேயே இருந்தார் தமாகா தலைவர் ஜிகே வாசன்..

தமாகா கூட்டணி: ஆனால், பாஜக, அதிமுக இரு தரப்பையும் சமாதானம் செய்ய எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், இறுதியில் பாஜகவுடனேயே தமாகா கூட்டணி என்று அறிவித்துவிட்டார்.

இதைக்கேட்டு தமாகா நிர்வாகிகளே அதிர்ச்சியாகிவிட்டனர். பாஜகவை காலம் காலமாக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் தமாகா, பாஜகவுடனேயே இணைந்து கொள்வதா? என்று தமாகா நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி: இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் வாசனிடம், “அதிமுக கூட்டணியில் எங்களுடன் இருங்கள்” என்று பேசினாராம்.. எனினும், மத்தியில் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என நினைத்தும், பல்வேறு கணக்குகள் போட்டுப்பார்த்தும், எடப்பாடியுடன் செல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் ஜிகே வாசன்…

பாஜக கூட்டணியில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோருக்கெல்லாம் 1 சீட் மட்டுமே தந்தநிலையில், வாசன் மட்டும் 3 சீட்டை பெற்று, மூன்றிலுமே தோற்று போனது தமாகா… ஒருவேளை அதிமுகவுடன் தமாகா கைகோர்த்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்று தமாகா நிர்வாகிகளே தேர்தல் ரிசல்ட்டின்போது புலம்பி தள்ளிவிட்டார்களாம்.

மோடி அமைச்சரவை: இதற்கு பிறகு, மோடியின் 3வது மத்திய அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்கும் என எவ்வளவோ எதிர்பார்த்தார் வாசன். ஆனால், அது நடக்கவில்லை. இதனால், வாசனுடன் இருக்கும் கொஞ்சநஞ்ச த.மா.கா.வினரும், இனியும் இலவு காத்த கிளி மாதிரி அமைச்சர் பதவிக்கு தலைவர் காத்திருக்கக்கூடாது என வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.

இப்போது ஜிகே வாசனுக்கும், சீச்சீ… இந்த பழம் புளிக்கும் என்கிற சலிப்பு பாஜக மீது வர துவங்கிவிட்டதாம். ஆனாலும் அதனையெல்லாம் வெளிக் காட்டிக்கொள்ளாமல், கட்சியின் செயற்குழுவை கடந்த வாரம் நடத்தியிருக்கிறார் வாசன். ஆனால், இந்த கூட்டம் குறித்து எந்த பரபரப்பும் ஏற்படவில்லை, பலருக்குமே தெரியவில்லை..

கண்ணோட்டம்: இந்த கூட்டத்தில் பேசிய அனைவருமே பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்கிற கண்ணோட்டத்திலேயே கருத்துக்களை தெரிவித்தார்களாம்.. அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும், அதற்கான நட்புறவை இப்போதிலிருந்தே மெல்ல மெல்ல துவக்க வேண்டும் என்றும் வாசனிடம் சொன்னார்களாம்..

அதற்கு வாசன், “அதிமுகவுடன் மீண்டும் எப்படி பேசுவது என யோசிக்க வேண்டியதிருக்கிறது. இருப்பினும் கூட்டணி குறித்து இப்போதே சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விவாதிக்கலாம், அப்போது விரிவாக பேசலாம்” என்று கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டாராம் தமாகா தலைவர் ஜி கே வாசன்.

Leave a Response