தெலுங்கானாவில் தொழில் அதிபர் வீட்டில் 950 கோடியை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் கைது

சாக்லெட் கம்பெனி நடத்தி வரும் சென்னை தொழிலதிபர் வீட்டில் ₹950 கோடியை கொள்ளையடிக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பிராமணப்பள்ளியை சேர்ந்தவர் போகினிஜங்கையா, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது நண்பர்கள் மன்சூராபாத்தை சேர்ந்த சேகர், எம்.டி.மைமூத்து. சேகர் டிரைவராகவும், மைமூத்து மணல் வியாபாரியாகவும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர்.

இந்நிலையில் துர்க்கையஞ்சல் ஸ்ரீராம்நகரில் வசிக்கும் சென்னையை சேர்ந்த சாக்லெட் நிறுவன உரிமையாளர் திருமணந்துரை என்பவரின் வீட்டில் கணக்கில் வராத ₹950 கோடி பதுக்கியுள்ளதாக போகினி ஜங்கையாவுக்கு வேறு ஒரு நபர் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜங்கையா தனது நண்பர்களிடம் கூறினார்.
மேலும் திருமணந்துரை வீட்டில் பணம் இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு மந்திரவாதியை அழைத்து பூஜை செய்ய முடிவு செய்தனர். ஆனால் மந்திரவாதி வராததால் மேட்சலையை சேர்ந்த பெட்டி ஸ்ரீனிவாஸ், அவரது நண்பர் ரசாக் மற்றும் திருமணந்துரை வீட்டில் வேலை செய்து விலகிய ஊழியர் ஆகியோர் மூலம், சாக்லெட் நிறுவன உரிமையாளர் வீட்டில் பணம் இருப்பது உண்மை என்பதை ஜங்கையா அறிந்து கொண்டார்.

இதனையடுத்து ஜங்கையா உள்பட 3 பேரும் சேர்ந்து ₹950 கோடியை கொள்ளையடிப்பது என்றும், அதற்கு பதிலாக அந்த இடத்தில் கருப்பு பேப்பரை வைக்கவும் திட்டமிட்டனர். இதற்காக போயின்பள்ளியை சேர்ந்த சதீஷ், ரசாக், ஜங்கையா, சேகர்ரெட்டி, மைமூத்து, பெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஊழியர்களான ஜாக்கி லக்கானி, முகமதுஆதில், சவுத்ஹஷ்மி, சையத்இஸ்மாயில், ரஹிமுல்லாகான், அக்பர்கான், ஷமிமுல்லா, முகமதுமுதாசிர் ஆகிய 14 பேர் சேர்ந்து பணத்தை திருட முயன்றனர்.

இதற்காக கருப்பு காகிதம், பவுடர் மற்றும் ரசாயன பைகள், இரும்பு கட்டர், நெருப்பு ஸ்பிரே, இரும்பு கம்பி, கத்தி போன்றவற்றை வாங்கிக்கொண்டு கடந்த மே 4ம் தேதி அதிகாலை திருமணந்துரை வீட்டுக்கு சென்றனர். ஆனால் வாட்ச்மேன் உட்பட உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் வெளியே இருந்தனர். இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு திரும்பினர். அதன்பிறகு கடந்த 10ம்தேதி நள்ளிரவு திட்டமிட்டபடி திருமணந்துரை வீட்டுக்குள் நுழைந்தனர். பின்புறம் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். சத்தம் கேட்டு வந்த 2 வாட்ச்மேன்களை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு தொழிலதிபர் திருமணந்துரை, சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தார். அப்போது சிலர் வீட்டிற்குள் நுழைவதைக்கண்டு அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் கொடுத்தார். உடனே ஆதிபட்லா போலீசார் விரைந்து வந்தனர். இதையறிந்த 14பேர் கும்பல் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த விவரங்களின்படி தலைமறைவாக இருந்த போகினி ஜங்கையா உட்பட 14 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் வந்த 3 கார்கள், ஒரு ஸ்கூட்டி, 16 செல்போன்கள், இரும்பு கட்டர்கள், இரும்பு கம்பிகள், கருப்பு காகித மூட்டைகள், ரசாயனங்கள் மற்றும் ₹80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response