ஊராரின் சாதியக் கட்டுப்பாட்டால் நின்று போன திருமணம் : மணமகள் போலீசில் புகார்.

ராமநாதபுரம் அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இளம் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு பத்திரிகை அடிக்கப்பட்ட நிலையில் கிராம மக்களின் மிரட்டலால் திருமணம் நின்று போனதாக கூறப்படுகிறது.

சாதி பிரச்சினையால் ஊர்க்காரர்கள் திருமணத்தை நிறுத்திய நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விருத்திகா. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவரது தாயார் சிறுவயல் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றிற்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வினோதினி என்பவரோடு அறிமுகமாகியுள்ளார்.

தொடர்ந்து, வினோதினியின் தம்பிக்கு விருத்திகாவை திருமணம் செய்து வைக்க கேட்டதன் அடிப்படையில், இரு வீட்டாரும் சந்தித்து பரஸ்பரம் மணம் முடிக்க பேசி முடிவெடுத்துள்ளனர். வினோதினியோ, அவரது தந்தை சந்திரன் தாய் லதா ஆகியோரோடு சென்று தனது மூத்த தம்பியான பூமிநாதன் என்பவருக்கு விருத்திகா வீட்டில் வைத்து பூ வைத்து நலங்கு செய்துள்ளார். நாளைய தினம் திருமணம் நடைபெற உள்ளதையொட்டி, பத்திரிக்கை அடித்து இரு வீட்டாரும் உறவுகளை அழைத்து தாலி தாம்பூலம் என அனைத்து பொருட்களும் வாங்கியுள்ளனர்.

இப்படி இருவீட்டாரும் திருமணத்திற்கு தயாராக இருந்த நிலையில் இடியாக வந்துள்ளது ஒரு செல்ஃபோன் அழைப்பு. திருமணத்தை பதிவு செய்வதற்காகவும், திருமண உதவித் தொகை திட்டத்தில் பலன் பெறுவதற்காகவும் விருத்திகாவின் கல்வி சான்றிதழை மாப்பிள்ளை விட்டார் கேட்டுள்ளனர். அப்படி கேட்டு வாங்கிய சான்றிதழில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவர, இது தொடர்பாக மணமகனின் ஊராருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெண் வீட்டார் மாற்றுச் சமூகத்தினர் என்பதால் திருமணத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லை எனில் வீட்டில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என்று கிராம மக்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், பெண் வீட்டாருக்கு தொலைபேசியில் அழைத்த மாப்பிள்ளையின் வீட்டார், நாளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்ட நிலையில், திடீரென மணமகன் வீட்டார் கூறுவதை கேட்டு என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்ற பெண் வீட்டார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனால் வருத்தப்பட்ட மணமகள் விருத்திகா தன்னை தன் எதிர்கால கணவனோடு சேர்த்து வைக்க வேண்டும். அவருடைய செல்போனை அனைத்து வைத்துவிட்டனர் எப்படியாவது அவரை மீட்டு உரிய நேரத்தில் திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது மட்டும் அல்லாது பூமிநாதனின் உறவுக்கார பையனான அதே சிறுவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவருக்கும், விருத்திகாவின் உறவுக்கார பெண்ணான சிந்து நதி என்பவருக்கும் இதே போல இரு விட்டாரும் திருமணம் பேசி முடித்து கடந்த பதினாறாம் தேதி அன்று திருமணம் பேசி முடித்துள்ளனர். அந்த திருமணத்தையும் சிறுவயல் கிராமத்தாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நிறுத்தி விட்டதாக கூறி திருமணமாக வேண்டிய இரண்டு இளம் பெண்களும் கண்ணீரோடு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த இரு பெண்களின் திருமணத்திலும் மாப்பிள்ளைகளுக்கோ அவர்களது குடும்பத்தாருக்கோ பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில், இரு தரப்பும் என்ன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்தே திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால், எல்லாம் கைகூடி மணம் முடிக்கும் நேரத்தில் ஊரார் அச்சுறுத்தலின் பேரில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response