தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று : அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் :

“நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் – சகோதரத்துவம் – அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள். நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி:

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

ஓ.பன்னீர்செல்வம்:

ஒற்றுமையே உயர்வு தரும் என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒன்றுமை உணர்வு மேலோங்கிட வேண்டும், வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்பதை தெரிவித்து எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

காங்கிரஸ் செல்வப்பெருந்தகை: இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக ராமதாஸ்:

பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது. மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம்.

டிடிவி தினகரன்:

தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும்.

Leave a Response