போலீஸாரிடம் ஆவேசமாக பேசிய பெண் – வைரலாகும் வீடியோ.

கரூர் பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்தெரிவித்த பெண், இது தொடர்பாக போலீஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

சேலத்தைச் சேர்ந்தவர் சுமதி(54). மக்கள் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பின் மாநிலப் பொருளாளரான இவர், திண்டுக்கல் சென்றுவிட்டு சேலம் திரும்புவதற்காக கடந்த 14-ம் தேதி இரவு கரூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். பேருந்துக்கு காத்திருந்த சுமதியிடம், மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டதால், அந்த இளைஞரை சுமதி உதைத்து விரட்டியுள்ளார். ஆனால், பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் சுமதிக்கு உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், சுமதி அவசர காவல் உதவிக்காக 100-க்கு செல்போனில் அழைத்தபோதும் யாரும் வரவில்லை. பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திலும் போலீஸார் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உறவினர் என்று கூறப்படும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமிக்கு தகவல் அளித்துள்ளார். அவர் வழக்கறிஞருடன் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, போலீஸாரும் அங்கு வந்துள்ளனர்.

போலீஸாரே இல்லை… போலீஸாரை பார்த்ததும் ஆவேசமடைந்த சுமதி, “கரூர் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுபோதையில் வந்த ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியபோதும், யாரும் உதவிக்கு வரவில்லை. இதுகுறித்து கேட்டால், அவர் மதுபோதையில் இருக்கிறார் என்கிறார்கள். பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையின் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தில் போலீஸாரே இல்லை. அவசர காவல் உதவி 100-க்குசெல்போனில் அழைத்தும் யாரும் வரவில்லை. காவல் ஆய்வாளருக்கு அழைத்தபோதும், செல்போனை எடுக்கவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு போலீஸார் கூட இல்லை. காவல் துறையில் போலீஸார் பற்றாக்குறை உள்ளது. அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதால், குடிகாரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. கரூர் பேருந்து நிலையத்தில் இது எனக்கு 2-வது அனுபவம்” என்று கூறினார்.

அப்போது அவரிடம், “என்ன நடந்தது, போதை இளைஞர் யார்?” என்று போலீஸார் கேட்டதும் மீண்டும் கோபமடைந்த சுமதி, “என்னிடம் ஒருவன் தகாத முறையில் நடந்து கொண்டான் என்று நான் கூறினால், நீங்கள் மீண்டும் மீண்டும் யார் அவன் என்று என்னிடமே கேட்கிறீர்கள். இதுபோல நடந்து கொள்பவன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டா இவ்வாறு செய்வான். கேமராவைப் பாருங்கள்” என்று கூறினார்.

இதையடுத்து, அவரிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், பின்னர் அவரை சேலம் பேருந்தில் ஏற்றி, அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்தனர். ஆனால், அதில் அந்த பெண் மட்டும் இருப்பது போன்ற காட்சி மட்டுமே இருந்ததால், மதுபோதையில் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கரூர் போலீஸாரிடம் சுமதி ஆவேசமாகப் பேசும் காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Response