தமிழகத்தில் அதிரடி : 12 IAS அதிகாரிகள் மாற்றம்

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! தமிழக அரசு அதிரடி..!

ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார் ஐஏஎஸ், மனிதவள மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக உள்ள ரீதா ஹரிஷ் தாகூர் ஐஏஎஸ், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன் ஐஏஎஸ், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதே நேரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் இ.சரவணவேல் ராஜ் ஐஏஎஸ், புவியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ் ஐஏஎஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபபட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.அன்பழகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பிரஜேந்திர நவ்னிட் ஐஏஎஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தனது விடுப்பு முடிந்து இப்பொறுப்பை ஏற்பார் என்றும், 16ஆவது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமுர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் சிறப்பு செயலாளராகவும், பூஜா குல்கர்னி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அதேபோல், சேலம் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை ஐஏஸ், தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சேகார்வ் அமைப்பின் மேலாண் இயக்குனரான லலிதடியா நீலம், சேலம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Response