பள்ளியை சுத்தம் செய்யச் சொல்வதா.? மாணவியுடன் TC வாங்கிச் சென்ற பெற்றோர்.

அதிர்ச்சி… குப்பை அள்ள சொல்லி மாணவியை அடித்த ஆசிரியை… பள்ளியில் சேர்ந்த 2 வது நாளே கொடூரம்!

இந்த தலைமுறை பெரும்பாலான விஷயங்களில் வேகமாக இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நாம், பெரும்பாலானவற்றை சகித்துக் கொண்டிருந்தோம்…

அல்லது பழகிக் கொண்டிருந்தோம். ஆசிரியர்களிடம் எதிர்த்து பேசியதில்லை. இப்போது அடுத்த தலைமுறை வந்து விட்டது. பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை வேலைகளுக்குப் பழக்கப்படுத்தாமல் பெற்றோர்கள் செல்லமாக வளர்க்கிறார்கள். கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு மத்த எடத்துல எல்லாம் அடிங்க என்று பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்ட காலம் எல்லாம் மாறிப் போய் விட்டது.

இப்போது எல்லாம் கொஞ்சம் நேரம் மாணவனை முறைத்துப் பார்த்தாலே ஆசிரியர் மீது நடவடிக்கை பாய தயாராகிறது. இந்நிலையில், வகுப்பறையைக் கூட்டச் சொல்லி மாணவியிடம் சொன்ன ஆசிரியை, மாணவி மறுத்ததால் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

மயிலாடுதுறையில் பூம்புகார் சாலையில் உள்ள பள்ளி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது மாணவியை, அரசு உதவி பெறும் புனித சின்னப்பர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்களன்று முதல் நாளாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, ​​ஒரு ஆசிரியை, வகுப்பை கூட்டிவிட்டு, சுத்தம் செய்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது, ​​வெளியில் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வேன் நின்று கொண்டிருப்பதாகவும், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் மாணவி கூறி வகுப்பறையைக் கூட்ட மறுத்துள்ளதால், ஆசிரியை மாணவியின் கன்னத்தில் அறைந்ததாக மாணவி வீட்டிற்குச் சென்றதும் பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று மாணவியுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர், படிக்க வந்த மகளை எப்படி வேலை வாங்குவீர்கள் என பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியை வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாக கூறி பள்ளியில் சேர்த்த அடுத்த நாளே மாணவியின் டிசியை வாங்கி சென்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகம் மாணவிகளை கொடுமைப்படுத்துவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறியதாவது: பள்ளியில் மதியம் 3.30 மணி முதல் ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்ததால், ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைக்கு செல்லவில்லை, மாணவியை யாரும் அடிக்கவில்லை. மேலும் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாணவர்கள் தினமும் சுத்தம் செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர்.

Leave a Response