மெரினா கடற்கரை பார்வைக்கு இரவு நேர அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்.

கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் மெரினா கடற்கரையில் காற்று வாங்க குவிகின்றனர். ஆனால் போலீசார் பொதுமக்களை இரவு 10 மணியுடன் கிளம்ப சொல்லி வற்புறுத்துகின்றனர்.

எனவே 10 மணிக்கு மேலும் பொதுமக்களை மெரினா கடற்கரையில் அனுமதிக்கவும், பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோடை காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மனு விசாரணைக்கு தற்போது உகந்ததில்லை என்றும், இது குறித்து போலீசாரே தகுந்த முடிவு எடுக்கும்படியும், நள்ளிரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களை கடற்கரையில் அனுமதிக்க முடியாது என்று கூறி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Response