இன்னும் கொஞ்ச நாளில் அதிமுக என்ன நிலைமைக்கு வருகிறது என்று நீங்களே பார்ப்பீர்கள் – அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நடைபெற்ற பாலாலயம் நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, முத்துராஜா எம்.எல்.ஏ.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் கோவில் வளாகத்தில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள். கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது. இண்டியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

அதனால் இண்டியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்றுதான். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் 40-க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து நிறைவேற்றி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். ஆனால் அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அ.தி.மு.க.வை பற்றி விமர்சிக்கவில்லை.

ஆனால் தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் தி.மு.க.வை விமர்சித்தால் எங்களுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதி உள்ளது. அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது? என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர. பா.ஜ.க. தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை.

எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறைவாகாது. எங்களை பொறுத்தவரை வாக்குகள் சிதறி இருக்கின்றனவே தவிர, நிச்சயமாக தி.மு.க. கடந்த முறை வாங்கிய வாக்குகளை வாங்கி உள்ளோம்.

கடந்த முறை 24 இடங்களில் நின்றோம். இந்த முறை 22 இடங்களில் நின்றுள்ளோம். அதனால் அந்த சதவீதத்தை கணக்கிட்டுள்ளனர். அதனால் எங்களது கூட்டணி எப்போதும் பெற்றுள்ள வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

மத்தியில் தமிழகத்திற்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டால் வரவேற்போம். அப்படி வரக்கூடியவர்களால் தமிழகத்திற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response