லோக்சபா தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்ற பிரசாந்த் கிஷோரின் கணிப்பு தவறாகப் போன நிலையில், இது தொடர்பாக முதல்முறையாக அவர் விளக்கமளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அனைத்து சர்வேக்களும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் எதிராக அமைந்தது.
பிரசாந்த் கிஷோர்: குறிப்பாகப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 2019 தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெல்லும் எனக் கணித்தார். மேலும், இதில் எதிர்க்கட்சிகளை பாஜக க்ளீன் ஸ்வீப் செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் மாறாக இருந்தது.
கடந்த 2019 தேர்தலில் வென்றதை விட 20 சதவீதம் குறைவான தொகுதிகளில், அதாவது 240 சீட்களை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது. இருப்பினும் என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான நம்பரை பெற்றதால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்..
பிரசாந்த் கிஷோர்: இதற்கிடையே தேர்தல் முடிவுகள் குறித்தும் தனது கணிப்புகள் தவறாகிப் போனது குறித்தும் பிரசாந்த் கிஷோர் முதல்முறையாகக் கருத்து கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் தனது கணிப்புகள் தவறாகிப் போனதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இதற்காக மக்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கடந்த இரண்டு நாட்களாக எந்தவொரு கருத்தும் சொல்லாமல் இருந்த பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆம், நானும் சர்வே நடத்துவோரும் தவறாகப் புரிந்து கொண்டோம்.. மக்களை விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
இனி சொல்ல மாட்டேன்: வரும் தேர்தல்களில் எந்தக் கட்சி எத்தனை சீட்களில் வெல்லும் எனத் தொடர்ந்து சொல்வீர்களா என்ற கேள்விக்கு அவர், “இல்லை.. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என நான் சொல்ல மாட்டேன். அது குறித்து நான் பேசப் போவது இல்லை” என்றார்.
தொடர்ந்து தனது கணிப்புகள் தப்பாகிப் போக என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பல விஷயங்களால் எனது கணிப்பு மொத்தமாகத் தப்பாகப் போய்விட்டது.. நான் மக்கள் முன்பு எனது கணிப்பை முன்வைத்தேன். ஆனால், அது மிகப் பெரியளவில் அதாவது 20 சதவிகிதம் வரை தவறாகிப் போய்விட்டது..
கோபம் இல்லை: பாஜக 300ஐ நெருங்கிவிடும் என்று நாங்கள் சொன்னோம்.. ஆனால் அவர்களால் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு சிறிய கோபம் இருப்பதாக நான் முன்பே கூறியிருந்தேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அதேநேரம் நாட்டில் பரவலான அதிருப்தி இல்லை” என்று பிரசாத் கிஷோர் கூறினார்.
தவறு இல்லை: எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய அவர், “எதிர்க்கட்சியினர் ஒரு பாசிட்டிவ் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை.. இதனால்தான் கிழக்கு மற்றும் தெற்கே பாஜக கால் பதிக்கும் என நான் கூறியிருந்தேன். இப்போது வெளிப்படையாக நான் கணித்தது தப்பாகிப் போனது என்று தெரிந்துவிட்டது. ஆனால், நீங்கள் நம்பரை தாண்டி பார்த்தால் எங்கள் கணிப்பு தவறாக இல்லை.
வாக்கு சதவிகிதம் அடிப்படையில் பாஜக 36 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.. இது முந்தைய தேர்தலைக் காட்டிலும் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே குறைவாகும்” என்று அவர் தெரிவித்தார்.
அப்படியே நடந்து இருக்கு: தொடர்ந்து இதுபோல எத்தனை சீட்களில் ஒரு கட்சி வழங்கும் என்ற கணிப்பை வழங்குவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஒரு தேர்தல் வியூக வல்லுநராக நம்பர்களுக்குள் போய் இருக்கக் கூடாது.. இதற்கு முன்பும் நான் சொல்லியது இல்லை.. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் செய்த இரண்டாவது தவறு இது.. ஒருமுறை மேற்கு வங்கத்தில் தவறு செய்தேன்.. இது (லோக்சபா தேர்தல்) இரண்டாவது தவறு.. அதேநேரம் நம்பரை நீக்கிவிட்டுப் பார்த்தால் நான் சொன்னது அப்படியே நடந்து இருக்கிறது” என்றார்.