3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதோடு அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறிய கடைசி வார்த்தைகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 272 கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
பாஜக கூட்டணி கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபா நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்பிக்களின் உதவியுடன் ஆட்சியை அமைக்க உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று டெல்லி பழைய நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதனை பிற தலைவர்கள் வழிமொழிந்தனர். அதன்பிறகு நரேந்திர மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் அனுமதி வழங்கி உள்ளார்.
இதையடுத்து நாளை இரவு ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் நரேந்திர மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலகின் பெரும் பணக்காரராக அறியப்படும் டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் தனது வாழ்த்தினை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி. இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன” என்றார்.